லூக்கா எழுதிய சுவிசேஷம் 23
23
பிலாத்துவின் கேள்வி
(மத்தேயு 27:1-2,11-14; மாற்கு 15:1-5; யோவான் 18:28-38)
1அந்தக் கூட்டம் முழுவதும் எழுந்து நின்று இயேசுவைப் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றது. 2அவர்கள் இயேசுவைப் பழிக்க ஆரம்பித்தார்கள் பிலாத்துவிடம் அவர்கள், “நமது மக்களைக் குழப்புகிற செய்திகளைக் கூறுகிறபடியால் இந்த மனிதனை நாங்கள் பிடித்து வந்தோம். இராயனுக்கு வரி கொடுக்கக் கூடாதென்று அவன் கூறுகிறான். அவன் தன்னைக் கிறிஸ்துவாகிய ராஜா என்று அழைக்கிறான்” என்றனர்.
3பிலாத்து இயேசுவிடம், “நீ யூதரின் ராஜாவா?” என்று கேட்டான்.
இயேசு, “ஆம், அது சரியே” என்றார்.
4அதைக் கேட்ட பிலாத்து தலைமை ஆசாரியரிடமும், மக்களிடமும் “இந்த மனிதனிடம் தவறு எதையும் நான் காணவில்லையே” என்றான்.
5அவர்கள் மீண்டும் மீண்டுமாக, “இயேசு மக்களின் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கிக்கொண்டுள்ளான். யூதேயாவைச் சுற்றிலும் அவன் போதிக்கிறான். அவன் கலிலேயாவில் ஆரம்பித்து இங்கு வந்திருக்கிறான்” என்றார்கள்.
ஏரோதுவின் முன் இயேசு
6அதைக் கேட்ட பிலாத்து, “இயேசு கலிலேயாவிலிருந்து வந்தவரா?” என்று வினவினான். 7பின்பு ஏரோதின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் இருந்து இயேசு வருவதை அறிந்தான். அப்போது ஏரோது எருசலேமில் இருந்தான். எனவே பிலாத்து, இயேசுவை அவனிடம் அனுப்பினான்.
8இயேசுவைப் பார்த்ததும் ஏரோது மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவரைப்பற்றி அவன் அதிகமாக கேள்விப்பட்டிருந்தபடியினாலும், இயேசு ஏதேனும் ஓர் அதிசயம் செய்வாரா எனப் பார்க்க விருப்பப்பட்டிருந்தபடியினாலும் அவரைக் காண வெகு நாளாக விருப்பம்கொண்டிருந்தான். 9இயேசுவிடம் பல கேள்விகளைக் கேட்டான் ஏரோது. ஆனால் இயேசு ஒன்றுமே கூறவில்லை. 10தலைமை ஆசாரியரும், வேதபாரகரும் அங்கே நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் இயேசுவுக்கு எதிரானவைகளை உரக்கக் கூறிக்கொண்டிருந்தார்கள். 11ஏரோதுவும், அவனது வீரர்களும் இயேசுவைப் பார்த்து நகைத்தார்கள். ராஜாவுக்குரிய ஆடைகளை அணிவித்து அவரை எள்ளி நகையாடினார்கள். பின்பு ஏரோது இயேசுவைப் பிலாத்துவிடமே திரும்ப அனுப்பினான். 12முன்னர் பிலாத்துவும், ஏரோதுவும் பகைவர்களாக இருந்து வந்தனர். ஆனால் அன்று ஏரோதுவும், பிலாத்துவும் நண்பர்களாயினர்.
பிலாத்துவும் மக்களும்
(மத்தேயு 27:15-26; மாற்கு 15:6-15; யோவான் 18:39–19:16)
13தலைமை ஆசாரியரையும் யூத அதிகாரிகளையும் மக்களோடு கூட பிலாத்து அழைத்தான். 14பிலாத்து அவர்களை நோக்கி, “நீங்கள் இந்த மனிதனை (இயேசு) என்னிடம் அழைத்து வந்தீர்கள். மக்களின் நடுவில் அமைதியின்மையை விளைவிக்கிறான் என்று சொன்னீர்கள். ஆனால் உங்களுக்கு முன்பாக நான் நியாயம் தீர்த்தேன். அவன் செய்ததாக நான் எந்தக் குற்றத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை. நீங்கள் புகார் சொல்கிற காரியங்களில் இயேசு குற்றவாளியாக்கப்படவில்லை. 15மேலும் ஏரோதுவும் அவரிடம் தவறேதும் காணவில்லை. மீண்டும் இயேசுவை நம்மிடமே திருப்பி அனுப்பினான் ஏரோது. அவருக்கு மரணதண்டனை தரத் தேவையில்லை. 16எனவே நான் அவரைச் சிறிய தண்டனை ஏதேனும் கொடுத்து விடுவித்து விடுவேன்” என்றான். 17#23:17 சில கிரேக்கப் பிரதிகளில் லூக்காவில் 17வது வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. “ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகையின்போது யாரேனும் ஒரு சிறைக் கைதியை விடுவிப்பது பிலாத்துவின் வழக்கம்.”
18ஆனால் மக்கள் அனைவரும், “அவனைக் கொல்லுங்கள். பரபாசை விடுதலை செய்யுங்கள்” என்று சத்தமிட்டனர். 19(நகருக்குள் கலகம் விளைவித்ததற்காக ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனிதன் பரபாஸ். அவன் சிலரைக் கொன்றுமிருந்தான்.)
20பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பினான். எனவே பிலாத்து மீண்டும் அவர்களை நோக்கி, இயேசுவை விடுவிப்பதாகக் கூறினான். 21ஆனால் அவர்கள் மீண்டும் உரத்த குரலில், “அவனைக் கொல்லுங்கள். அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்றார்கள்.
22மூன்றாம் முறை பிலாத்து மக்களை நோக்கி, “ஏன்? அவன் என்ன தவறு செய்தான்? அவன் குற்றவாளி அல்ல. அவனைக் கொல்வதற்கேற்ற காரணம் எதையும் நான் காணவில்லை. எனவே அவனுக்குச் சிறிய தண்டனை கொடுத்து அவனை விடுதலை செய்வேன்” என்றான்.
23ஆனால் தொடர்ந்து மக்கள் சத்தமிட்டார்கள். இயேசுவைச் சிலுவையில் அறைய வேண்டுமென வேண்டினார்கள். அவர்கள் மிகவும் உரத்த குரலில் சத்தமிட்டதைக் கேட்டதும் 24அவர்களின் விருப்பத்தின்படியே செய்ய முடிவெடுத்தான் பிலாத்து. 25மக்கள் அனைவரும் பரபாஸ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று விரும்பினர். கலகம் விளைவித்ததற்காகவும் மக்களைக் கொன்றதற்காகவும் பரபாஸ் சிறையில் இருந்தான். பிலாத்து பரபாஸை விடுவித்தான். கொல்லப்படும்பொருட்டு, இயேசுவை மக்களிடம் பிலாத்து ஒப்படைத்தான். மக்களும் அதையே விரும்பினர்.
சிலுவையில் இயேசு
(மத்தேயு 27:32-44; மாற்கு 15:21-32; யோவான் 19:17-27)
26இயேசுவைக் கொல்லும்பொருட்டு வீரர்கள் வெளியே அழைத்துச் சென்றனர். அப்போது வயல்களிலிருந்து நகருக்குள் ஒரு மனிதன் வந்துகொண்டிருந்தான். அவன் பெயர் சீமோன். அவன், சிரேனே நகரைச் சேர்ந்தவன். இயேசுவின் சிலுவையைச் சுமந்து அவரைத் தொடர்ந்து வருமாறு சீமோனை வீரர்கள் வற்புறுத்தினார்கள்.
27பலரும் இயேசுவைத் தொடர்ந்தனர். சில பெண்கள் வருந்தி அழுதனர். அவர்கள் இயேசுவுக்காகக் கவலைப்பட்டனர். 28ஆனால் இயேசு திரும்பி அப்பெண்களை நோக்கி, “எருசலேமின் பெண்களே, எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காவும் அழுங்கள். 29ஏனெனில் பிள்ளைகளைப் பெற முடியாத பெண்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்றும் பிள்ளைகள் இல்லாத பெண்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்றும் மக்கள் பேசப்போகும் காலம் வரும். 30அப்போது மக்கள் மலையை நோக்கி, ‘எங்கள் மேல் விழு’ என்பார்கள். சிறு குன்றுகளை நோக்கி, ‘எங்களை மறைத்துக்கொள்’ என்று சொல்லத் தொடங்குவார்கள்.#ஓசி. 10:8 31வாழ்க்கை நன்றாக இருக்கும்போது மக்கள் இவ்வாறு நடந்துகொண்டால், தீமையான காலம் வரும்போது என்ன நிகழும்?”#23:31 வாழ்க்கை … நிகழும் எழுத்தின்படியான பொருள் “அவர்கள் பசுமை மரத்தையே இவ்வாறு செய்தால் காய்ந்த மரத்தை என்ன செய்வர்?” என்றார்.
32கொல்லப்படுவதற்காக இரண்டு குற்றவாளிகளும் இயேசுவோடு வழி நடத்திச்செல்லப்பட்டார்கள். 33இயேசுவும், அக்குற்றவாளிகளும் “கபாலம்” என்று அழைக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு வீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அவர்கள் குற்றவாளிகளையும் சிலுவையில் அறைந்தார்கள். ஒரு குற்றவாளியை இயேசுவின் வலது பக்கத்திலும், இன்னொரு குற்றவாளியை இயேசுவின் இடது பக்கத்திலும் சிலுவையில் அறைந்தார்கள்.
34இயேசு, “தந்தையே, என்னைக் கொல்கிற இந்த மக்களை மன்னித்தருளுங்கள். அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்” என்றார்.
இயேசுவின் ஆடைகளை எடுப்பது யார் என்று சீட்டுப்போட்டுப் பார்த்தார்கள். 35இயேசுவைப் பார்த்தபடி மக்கள் நின்றனர். யூத அதிகாரிகள் இயேசுவைப் பார்த்து நகைத்தனர். அவர்கள், “தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்து என்றால் அவனே தன்னைக் காப்பாற்றிக்கொள்ளட்டும். அவன் பிற மக்களைக் காப்பாற்றவில்லையா?” என்றார்கள்.
36வீரர்களும் கூட இயேசுவைப் பார்த்துச் சிரித்து எள்ளி நகையாடினார்கள். அவர்கள் இயேசுவை நெருங்கி புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்தனர். 37வீரர்கள், “நீ யூதர்களின் ராஜாவானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்” என்றனர். 38சிலுவையில் மேல் பகுதியில் “இவன் யூதர்களின் ராஜா” என்ற சொற்கள் எழுதப்பட்டிருந்தன.
39சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் இயேசுவுக்கு எதிராகத் தீய சொற்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். “நீ கிறிஸ்து அல்லவா? உன்னைக் காப்பாற்றிக்கொள். எங்களையும் காப்பாற்று” என்றான்.
40ஆனால் இன்னொரு குற்றவாளி அவனைத் தடுத்தான். அவன், “நீ தேவனுக்கு பயப்பட வேண்டும். நாம் எல்லாரும் விரைவில் இறந்து போவோம். 41நீயும், நானும் குற்றவாளிகள். நாம் செய்த குற்றங்களுக்கான விலையைக் கொடுக்க வேண்டியிருப்பதால் நீயும் நானும் கொல்லப்பட வேண்டியவர்கள். ஆனால் இம்மனிதரோ (இயேசு) எந்தத் தவறும் செய்ததில்லை” என்றான். 42பின்பு இக்குற்றவாளி இயேசுவை நோக்கி, “இயேசுவே, உங்கள் இராஜ்யத்தை ஆரம்பிக்கும்போது என்னை நினைவுகூர்ந்துகொள்ளுங்கள்” என்றான்.
43இயேசு அவனை நோக்கி, “கவனி, நான் சொல்வது உண்மை. இன்று நீ என்னோடு சேர்ந்து பரலோகத்திலிருப்பாய்” என்றார்.
இயேசு மரித்தல்
(மத்தேயு 27:45-56; மாற்கு 15:33-41; யோவான் 19:28-30)
44அப்போது மதிய வேளை. ஆனால் மதிய நேரம் பின்பு மூன்று மணிவரையிலும் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. 45சூரியன் தென்படவில்லை. தேவாலயத்தின் திரை இரண்டாகக் கிழிந்தது. 46இயேசு, “பிதாவே, என் ஆவியை உம்மிடம் தருகிறேன்” என்னும் வார்த்தையுடன் இறந்தார்.
47அங்கு நின்ற இராணுவ அதிகாரி நடந்தவற்றை எல்லாம் பார்த்தான். அவன், “இந்த மனிதன் உண்மையிலேயே தேவ குமாரன்தான் என்பதை அறிவேன்” என்று கூறியவாறே தேவனை வாழ்த்தினான்.
48இதைப் பார்க்கவென்று நகரிலிருந்து பலரும் வந்திருந்தார்கள். பார்த்ததும் துயரமிகுதியால் மார்பில் அறைந்தபடி வீட்டுக்குத் திரும்பினார்கள். 49இயேசுவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் அங்கு இருந்தார்கள். கலிலேயாவில் இருந்து இயேசுவைத் தொடர்ந்து வந்த சில பெண்களும் அங்கே இருந்தார்கள். அவர்கள் சிலுவைக்கு சற்றே தொலைவில் இவற்றைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார்கள்.
அரிமத்தியா ஊரின் யோசேப்பு
(மத்தேயு 27:57-61; மாற்கு 15:42-47; யோவான் 19:38-42)
50-51அரிமத்தியா என்னும் நகரில் இருந்து ஒரு மனிதன் அங்கே வந்திருந்தான். அவன் பெயர் யோசேப்பு. அவன் நல்ல பக்தியுள்ள மனிதன். தேவனின் இராஜ்யத்தின் வருகையை எதிர் நோக்கி இருந்தான். யூதர் அவையில் அவன் ஒரு உறுப்பினன். பிற யூத அதிகாரிகள் இயேசுவைக் கொல்ல முடிவெடுத்தபோது அவன் அதை ஒப்புக்கொள்ளவில்லை. 52இயேசுவின் உடலைக் கேட்கும்பொருட்டு யோசேப்பு பிலாத்துவிடம் சென்றான். உடலை எடுத்துக்கொள்ள பிலாத்து, யோசேப்புக்கு அனுமதி கொடுத்தான். 53எனவே யோசேப்பு சிலுவையில் இருந்து இயேசுவின் உடலைக் கீழே இறக்கி ஒரு துணியால் உடலைச் சுற்றினான். பிறகு பாறைக்குள் தோண்டப்பட்டிருந்த ஒரு கல்லறைக்குள் இயேசுவின் உடலை வைத்தான். அக்கல்லறை அதற்கு முன் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. 54அப்பொழுது ஆயத்த நாளின்#23:54 ஆயத்த நாள் வெள்ளிக்கிழமை. ஓய்வுநாளுக்கு முந்திய நாள். இறுதிப்பகுதி நெருங்கியது. சூரியன் மறைந்த பிறகு ஓய்வு நாள் ஆரம்பிக்கும்.
55கலிலேயாவில் இருந்து இயேசுவோடு வந்திருந்த பெண்கள் யோசேப்பைத் தொடர்ந்தனர். அவர்கள் கல்லறையைப் பார்த்தார்கள். இயேசுவின் உடல் உள்ளே கிடத்தப்பட்டிருந்த இடத்தையும் பார்த்தார்கள். 56இயேசுவின் உடலில் பூசுவதற்காக மணம்மிக்க பொருள்களைத் தயாரிப்பதற்காக அப்பெண்கள் சென்றார்கள்.
ஓய்வு நாளில் அவர்கள் ஓய்வெடுத்தார்கள். மோசேயின் சட்டம் இவ்வாறு செய்யுமாறு எல்லா மக்களுக்கும் கட்டளை இட்டிருந்தது.
Iliyochaguliwa sasa
லூக்கா எழுதிய சுவிசேஷம் 23: TAERV
Kuonyesha
Shirikisha
Nakili
Je, ungependa vivutio vyako vihifadhiwe kwenye vifaa vyako vyote? Jisajili au ingia
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International