1 நாளா 22:1-9

1 நாளா 22:1-9 IRVTAM

அப்பொழுது தாவீது: தேவனாகிய யெகோவாவுடைய ஆலயம் இருக்கும் இடம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்க தகனபலிபீடம் இருக்கும் இடமும் இதுவே என்றான். பின்பு தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நிய தேசத்தார்களைக் கூடிவரச்செய்து, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கான கற்களை வெட்டிப் பயன்படுத்தும் கொத்தனார்களை ஏற்படுத்தினான். தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் அதிகமான இரும்பையும், எடைபோட முடியாத ஏராளமான வெண்கலத்தையும், எண்ணமுடியாத அளவு கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியர்களும், தீரியர்களும் தாவீதுக்கு அதிகமான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள். தாவீது: என்னுடைய மகனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாக இருக்கிறான்; யெகோவாவுக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் புகழும் மகிமையும் உடையதாக விளங்கும்படி மிகப்பெரியதாயிருக்க வேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேமிக்க செய்யவேண்டும் என்று சொல்லி, தாவீது தன்னுடைய மரணத்திற்கு முன்னே அதிகமாக ஆயத்தம் செய்துவைத்தான். அவன் தன்னுடைய மகனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஆலயத்தைக் கட்டுவதற்காக அவனுக்குக் கட்டளைகொடுத்து, சாலொமோனை நோக்கி: என்னுடைய மகனே, நான் என்னுடைய தேவனாகிய யெகோவாவின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என்னுடைய இருதயத்தில் நினைத்திருந்தேன். ஆனாலும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி: நீ அதிகமான இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைச் செய்தாய்; நீ என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தச்செய்தாய். இதோ, உனக்குப் பிறக்கப்போகிற மகன் அமைதியுள்ள ஆண்மகனாக இருப்பான்; சுற்றி இருக்கும் அவனுடைய எதிரிகளையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவனுடைய பெயர் சாலொமோன் என்னப்படும்; அவனுடைய நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமைதியையும் கொடுப்பேன்.