பொறாமையும் வாக்குவாதமும் வேறுபாடுகளும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாக இருந்து மனித வழிமுறையில் நடக்கிறீர்களல்லவா? ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், மற்றொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் சரீரத்திற்குரியவர்களல்லவா? பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு கிருபை அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு காரணமாக இருந்த ஊழியக்காரர்கள்தானே. நான் நட்டேன், அப்பொல்லோ தண்ணீர்ப் பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, தண்ணீர்ப் பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாம் ஆகும். மேலும் நடுகிறவனும் தண்ணீர்ப் பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தகுந்தபடி கூலியைப் பெறுவான். நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாக இருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாக இருக்கிறீர்கள். எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்ப ஆசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் எப்படிக் கட்டுகிறான் என்று கவனமாக இருக்கவேண்டும். போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறு அஸ்திபாரத்தைப்போட ஒருவனாலும் முடியாது. ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக்கொண்டு கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளிப்படும்; நியாயத்தீர்ப்பு நாளானது அதை வெளிப்படுத்தும். ஏனென்றால், அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளது என்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியில் அகப்பட்டுத் தப்பினதுபோல இருக்கும்.
நீங்கள் தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாசமாக இருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், தேவன் அவனைக் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாக இருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றாமல் இருக்கட்டும்; இந்த உலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகவேண்டும். ஏனெனில், இந்த உலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாக இருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும், ஞானிகளுடைய எண்ணங்கள் வீணாக இருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது. இப்படியிருக்க, ஒருவனும் மனிதர்களைக்குறித்து மேன்மைபாராட்டாமலிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே; பவுலானாலும், அப்பொல்லோவானாலும், கேபாவானாலும், உலகமானாலும், ஜீவனானாலும் மரணமானாலும், நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும், எல்லாம் உங்களுடையது; நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்.