1 பேது 3:5-22

1 பேது 3:5-22 IRVTAM

இப்படியே ஆதிக்காலங்களில் தேவனிடம் நம்பிக்கையாக இருந்த பரிசுத்தப் பெண்களும் தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். அப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்திற்கும் பயப்படாமல் இருந்தீர்களென்றால் அவளுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள். அப்படியே கணவன்மார்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாக இருக்கிறதினால், உங்களுடைய ஜெபங்களுக்குத் தடைவராதபடி, நீங்கள் ஞானத்துடன் அவர்களோடு வாழ்ந்து, உங்களோடு அவர்களும் நித்தியஜீவனாகிய கிருபையைப் பெற்றுக்கொள்ளுகிறவர்களாக இருப்பதினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள். மேலும், நீங்களெல்லோரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கம் உள்ளவர்களும், சகோதரஅன்பு உள்ளவர்களும், மனதுருக்கம் உள்ளவர்களும், தாழ்மை உள்ளவர்களுமாக இருந்து, தீமைக்குத் தீமையையும், அவமானத்திற்கு அவமானத்தையும் செய்யாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறவர்கள் என்று தெரிந்து, ஆசீர்வாதம்பண்ணுங்கள். ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைப் பார்க்கவேண்டுமென்று இருக்கிறவன் தீமையானவைகளுக்குத் தன் நாக்கையும், கபடான வார்த்தைகளுக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, தீமைகளைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரவேண்டும். கர்த்தருடைய கண்கள் நீதிமான்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது, அவருடைய காதுகள் அவர்களுடைய வேண்டுதல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் எதிராக இருக்கிறது.” நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்? நீதிக்காக நீங்கள் பாடுகள்பட்டால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து; கர்த்தராகிய தேவனை உங்களுடைய இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களுக்குள் இருக்கிற நம்பிக்கையைப்பற்றி உங்களிடம் விசாரித்துக் கேட்கிற எல்லோருக்கும் சாந்தத்தோடும், மரியாதையோடும் பதில்சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாக இருங்கள். கிறிஸ்துவிற்குரிய உங்களுடைய நல்ல நடக்கையை அவமதிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று உங்களுக்கு எதிராகச் சொல்லுகிற விஷயத்தில் அவர்கள் வெட்கப்பட்டுப்போகும்படி நீங்கள் நல்ல மனச்சாட்சி உள்ளவர்களாக இருங்கள். தீமைசெய்து பாடுகள் அனுபவிப்பதைவிட, தேவனுக்கு விருப்பமானால், நன்மைசெய்து பாடுகள் அனுபவிப்பதே மேன்மையாக இருக்கும். ஏனென்றால், கிறிஸ்துவும் நம்மை தேவனிடம் சேர்ப்பதற்காக அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதி உள்ளவராகப் பாவங்களுக்காக ஒருமுறை பாடுகள் பட்டார்; அவர் சரீரத்திலே கொலை செய்யப்பட்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய், சிறைக்காவலில் உள்ள ஆவிகளுக்குப் பிரசங்கம்பண்ணினார். அந்த ஆவிகள், நோவா கப்பலைக் கட்டின நாட்களிலே, தேவன் அதிக பொறுமையோடு காத்திருந்தபோது, கீழ்ப்படியாமல் போனவைகள்; அந்தக் கப்பலிலே எட்டு நபர்கள்மட்டுமே பிரவேசித்து தண்ணீரினாலே காக்கப்பட்டார்கள். அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, சரீர அழுக்கை நீக்குவதாக இல்லாமல், தேவனைப் பற்றிக்கொள்ளும் நல்ல மனச்சாட்சியின் உடன்படிக்கையாக இருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது; அவர் பரலோகத்திற்குப்போய், தேவனுடைய வலதுபக்கத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும், அதிகாரங்களும், வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.