அவன் தனக்குச் சாமுவேல் குறித்தகாலத்தின்படி ஏழுநாள்வரை காத்திருந்தான்; சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, மக்கள் அவனை விட்டுச் சிதறிப்போனார்கள். அப்பொழுது சவுல்: சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான். அவன் சர்வாங்கதகனபலியிட்டு முடிக்கிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வரவேற்க அவனுக்கு எதிராக போனான். நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு, சவுல்: மக்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாளில் நீர் வராததையும், பெலிஸ்தர்கள் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும், நான் பார்த்ததினால், கில்காலில் பெலிஸ்தர்கள் எனக்கு விரோதமாக வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் யெகோவாவுடைய இரக்கத்தைத் தேடவில்லை என்றும் நினைத்துத் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான். சாமுவேல் சவுலைப் பார்த்து: முட்டாள் தனமாக செய்தீர்; உம்முடைய தேவனாகிய யெகோவா உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; கைக்கொண்டிருந்தால் யெகோவா இஸ்ரவேலின்மேல் உம்முடைய ராஜ்ஜியத்தை என்றென்றும் உறுதிப்படுத்துவார். இப்போதோ உம்முடைய ஆட்சி நிலைநிற்காது; யெகோவா தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதனைத் தமக்குத் தேடி, அவனைக் யெகோவா தம்முடைய மக்கள்மேல் தலைவனாக இருக்கக் கட்டளையிட்டார்; யெகோவா உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான். சாமுவேல் எழுந்து, கில்காலைவிட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடு இருக்கிற மக்களைக் கணக்கெடுக்கிறபோது, ஏறக்குறைய 600 பேர் இருந்தார்கள். சவுலும் அவனுடைய மகனான யோனத்தானும் அவர்களோடு இருக்கிற மக்களும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்துவிட்டார்கள்; பெலிஸ்தர்களோ மிக்மாசிலே முகாமிட்டிருந்தார்கள். கொள்ளைக்காரர்கள் பெலிஸ்தர்களின் முகாமிலிருந்து மூன்று படைகளாகப் புறப்பட்டு வந்தார்கள்; ஒரு படை ஒப்ரா வழியாய்ச் சூவால் நாட்டிற்கு நேராகப்போனது. வேறொரு படை பெத்தொரோன் வழியாகப் போனது; வேறொரு படை வனாந்தரத்தில் இருக்கிற செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லைவழியாகப் போனது. எபிரெயர்கள் பட்டயங்களையும் ஈட்டிகளையும் உண்டாக்காதபடிப் பார்த்துகொள்ள வேண்டும் என்று பெலிஸ்தர்கள் சொல்லியிருந்ததால், இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கொல்லனும் காணப்படவில்லை. இஸ்ரவேலர்கள் அனைவரும் அவரவர் தங்கள் கலப்பைகளின் இரும்புகளையும், தங்கள் மண்வெட்டிகளையும், தங்கள் கோடரிகளையும், தங்கள் கடப்பாரைகளையும் தீட்டிக் கூர்மையாக்குவதற்கு, பெலிஸ்தர்களிடத்திற்குப் போகவேண்டியதாக இருந்தது. கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், மூன்று கூருள்ள ஆயுதங்களையும், கோடரிகளையும், கதிர் அரிவாளையும் கூர்மையாக்குவதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது. யுத்தநாள் வந்தபோது, சவுலுக்கும் அவனுடைய மகனான யோனத்தானையும் தவிர, சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற மக்களில் ஒருவர் கையிலும் பட்டயமும் ஈட்டியும் இல்லாமல் இருந்தது. பெலிஸ்தர்களின் முகாம் மிக்மாசிலிருந்து போகிற வழிவரை பரவியிருந்தது.