2 தீமோ 4:7-22

2 தீமோ 4:7-22 IRVTAM

நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இப்பொழுது நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்த நாளிலே அதை எனக்குக் கொடுப்பார்; எனக்கு மாத்திரமல்ல, அவருடைய வருகையை விரும்பும் அனைவருக்கும் அதைக் கொடுப்பார். நீ சீக்கிரமாக என்னிடத்தில் வரும்படி ஆயத்தப்படு. ஏனென்றால், தேமா இந்த உலகத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். லூக்காமட்டும் என்னோடு இருக்கிறான். மாற்குவை உன்னோடு அழைத்துக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன். தீகிக்குவை நான் எபேசுவிற்கு அனுப்பினேன். துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவனிடத்தில் நான் வைத்துவிட்டுவந்த மேலங்கியையும், புத்தகங்களையும், விசேஷமாகத் தோல் சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா. கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக. நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாக இரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன். நான் முதல்முறை உத்தரவுசொல்ல நிற்கும்போது ஒருவனும் என்னோடுகூட இருக்கவில்லை, எல்லோரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சாராதிருப்பதாக. கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், யூதரல்லாத எல்லோரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் காப்பாற்றப்பட்டேன். கர்த்தர் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை இரட்சித்து, தம்முடைய பரலோக ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவிற்கும், ஒநேசிப்போருவின் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு. எரஸ்து கொரிந்து பட்டணத்தில் தங்கிவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன். மழைக்காலத்திற்குமுன் நீ வந்துசேரும்படி ஆயத்தப்படு. ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லா சகோதரர்களும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

2 தீமோ 4:7-22 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்