அப் 1:4-11

அப் 1:4-11 IRVTAM

அன்றியும், அவர் அவர்களோடு கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாட்களுக்குள்ளே பரிசுத்த ஆவியானவராலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். ஆகவே, நீங்கள் எருசலேமைவிட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார். அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய அதிகாரத்தில் வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி எல்லைவரையிலும், எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள் என்றார். இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது, வானத்திற்குமேல் எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்களுடைய கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, வெண்மையான உடையணிந்தவர்கள் இரண்டுபேர் அவர்கள் அருகே நின்று: கலிலேய மக்களே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடமிருந்து வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்களுடைய கண்களுக்கு முன்பாக வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.