யாத் 7:1-13

யாத் 7:1-13 IRVTAM

யெகோவா மோசேயை நோக்கி: “பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன்னுடைய தீர்க்கதரிசியாக இருப்பான். நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்; பார்வோன் இஸ்ரவேல் மக்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் அவனிடம் பேசவேண்டும். நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என்னுடைய அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாக நடப்பிப்பேன். பார்வோன் உங்களுடைய சொல்லைக்கேட்கமாட்டான்; ஆகையால் எகிப்திற்கு விரோதமாக நான் என்னுடைய கையை நீட்டி, கொடிய தண்டனையினால் என்னுடைய சேனைகளும் என்னுடைய மக்களுமாகிய இஸ்ரவேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்வேன். நான் எகிப்தின்மேல் என்னுடைய கையை நீட்டி, இஸ்ரவேலர்களை அவர்கள் நடுவிலிருந்து புறப்படச்செய்யும்போது, நானே யெகோவா என்று எகிப்தியர்கள் அறிவார்கள்” என்றார். மோசேயும் ஆரோனும் யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள். அவர்கள் பார்வோனோடு பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாக இருந்தது. யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “உங்களை ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடு சொன்னால்; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன்னுடைய கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு என்பாயாக; அது பாம்பாகும்” என்றார். மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவனுடைய வேலைக்காரர்களுக்கு முன்பாகவும் தன்னுடைய கோலைப் போட்டான், அது பாம்பானது. அப்பொழுது பார்வோன் ஞானிகளையும், சூனியக்காரர்களையும் அழைத்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள். அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் பாம்புகளாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கியது. யெகோவா சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான்.