பஸ்காபண்டிகைக்கு முன்பே, இயேசு இந்த உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இந்த உலகத்தில் இருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுவரைக்கும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். சீமோனின் மகனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் மாலை உணவு சாப்பிடும்போது; தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தார் என்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து; பந்தியிலிருந்து எழுந்து, தம்முடைய மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து, இடுப்பிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சீடர்களுடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த துண்டால் துடைக்கவும் தொடங்கினார்.
அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப்போகிறீரா? என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் செய்கிறது என்னவென்று இப்பொழுது உனக்கு தெரியாது, இனிமேல் தெரியும் என்றார். பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். அதற்குச் சீமோன்பேதுரு: ஆண்டவரே, என் கால்களை மட்டுமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான். இயேசு அவனைப் பார்த்து: குளித்தவன் தன் கால்களைமட்டும் கழுவவேண்டியதாக இருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாக இருக்கிறான்; நீங்களும் சுத்தமாக இருக்கிறீர்கள்; ஆனாலும் எல்லோரும் அல்ல என்றார். தம்மைக் காட்டிக் கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்கள் எல்லோரும் சுத்தமுள்ளவர்கள் இல்லை என்றார்.
அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய ஆடைகளை அணிந்துகொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் என்னைப் போதகர் என்றும், ஆண்டவர் என்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்களுடைய கால்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவவேண்டும். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானைவிட பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரைவிட பெரியவனல்ல. நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாக இருப்பீர்கள்.