எனக்கு இப்படிச் செய்தார் என்று சொல்லி, ஐந்து மாதங்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருந்தாள்.
எலிசபெத்தின் ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில், தாவீதின் வம்சத்தை சேர்ந்த யோசேப்பு என்கிற பெயருள்ள மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிப் பெண்ணிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிப் பெண்ணின் பெயர் மரியாள். அவள் இருந்த வீட்டில் தேவதூதன் தோன்றி: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். அவளோ அவனைப் பார்த்து, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துக்கள் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள். தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடமிருந்து கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. அவர் பெரியவராக இருப்பார், உன்னதமான தேவனுடைய குமாரன் எனப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: நான் கன்னிப்பெண்ணாய் இருக்கிறேனே, இது எப்படி நடக்கும்? என்றாள். தேவதூதன் அவளுக்கு மறுமொழியாக; பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார்; உன்னதமான தேவனுடைய பலம் உன்னை மூடும்; எனவே உன் கர்ப்பத்தில் பிறக்கும் இந்தப் பரிசுத்தக் குழந்தை, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும். இதோ, உன் இனத்தைச் சேர்ந்த எலிசபெத்தும் தன்னுடைய முதிர்வயதிலே ஒரு குமாரனைக் கர்ப்பம் தரித்திருக்கிறாள்; குழந்தை இல்லாதவள் என்று சொல்லப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம். தேவனாலே செய்யமுடியாத காரியம் ஒன்றும் இல்லை என்றான். அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு நடக்கட்டும் என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளைவிட்டுப் போய்விட்டான்.
அந்த நாளில் மரியாள் எழுந்து, மலைநாடாகிய யூதேயாவில் உள்ள ஒரு பட்டணத்திற்கு சீக்கிரமாகப்போய், சகரியாவின் வீட்டிற்குச் சென்று, எலிசபெத்தை வாழ்த்தினாள். எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துக்களைக் கேட்டபொழுது, அவளுடைய கர்ப்பத்தில் இருந்த குழந்தை துள்ளியது; எலிசபெத்து பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, அதிக சத்தமாக: பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்! இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் கர்ப்பத்திலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது. விசுவாசித்தவளே, நீ பாக்கியவதி, கர்த்தராலே உனக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.