லூக் 1:39-56

லூக் 1:39-56 IRVTAM

அந்த நாளில் மரியாள் எழுந்து, மலைநாடாகிய யூதேயாவில் உள்ள ஒரு பட்டணத்திற்கு சீக்கிரமாகப்போய், சகரியாவின் வீட்டிற்குச் சென்று, எலிசபெத்தை வாழ்த்தினாள். எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துக்களைக் கேட்டபொழுது, அவளுடைய கர்ப்பத்தில் இருந்த குழந்தை துள்ளியது; எலிசபெத்து பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, அதிக சத்தமாக: பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்! இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் கர்ப்பத்திலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது. விசுவாசித்தவளே, நீ பாக்கியவதி, கர்த்தராலே உனக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள். அப்பொழுது மரியாள்: “என் ஆத்துமா கர்த்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனிடம் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேவன் அடிமையாகிய என்னுடைய தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இனி எல்லா வம்சங்களும் என்னை பாக்கியம் பெற்றவள் என்பார்கள். வல்லமையுடைய தேவன் மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமானது. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும். அவர் தம்முடைய கரங்களினாலே வல்லமையுள்ள காரியங்களைச் செய்தார்; இருதய சிந்தைகளில் பெருமையுள்ளவர்களைச் சிதறிப்போகப்பண்ணினார். ராஜாக்களை பதவிகளிலிருந்து நீக்கி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களுக்கு நன்மையானதைக் கொடுத்து, செல்வந்தர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் வெறுமையாக அனுப்பிவிட்டார். நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, அவருடைய மக்களாகிய இஸ்ரவேல் தேசத்தினர்களுக்கு உதவி செய்தார்” என்றாள். மரியாள் ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசெபெத்துடன் தங்கியிருந்து, பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப்போனாள்.