லூக் 8:40-56

லூக் 8:40-56 IRVTAM

இயேசு திரும்பிவந்தபோது மக்களெல்லோரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள். அப்பொழுது ஜெப ஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பெயருள்ள ஒருவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே மகள் மரணவேதனையில் இருந்தபடியால், தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகும்பொழுது மக்கள்கூட்டம் அவரை நெருக்கினார்கள். அப்பொழுது பன்னிரண்டு வருடமாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டு, தன் சொத்துக்களையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சுகமாக்கப்படாமலிருந்த ஒரு பெண், அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது. அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லோரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள். அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார். அப்பொழுது அந்த பெண் தான் மறைந்திருக்கவில்லை என்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சுகமானதையும் எல்லா மக்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள். அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார். அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய மகள் மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்தவேண்டாம் என்றான். இயேசு அதைக்கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாக இரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும்தவிர வேறொருவரையும் உள்ளே வர அனுமதிக்காமல், எல்லோரும் அழுது அவளைக்குறித்துத் துக்கப்படுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, தூங்கிக்கொண்டு இருக்கிறாள் என்றார். அவள் மரித்துப்போனாளென்று அவர்களுக்கு தெரிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். அப்பொழுது அவள் உயிர் திரும்பவந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரம் கொடுங்கள் என்றார். அவளுடைய தாயும் தகப்பனும் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.