இயேசு மறுபடியும் அவர்களோடு உவமைகளாகப் பேசிச் சொன்னது என்னவென்றால்: பரலோகராஜ்யம் தன் குமாரனுக்கு திருமணம் செய்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது. அழைக்கப்பட்டவர்களைத் திருமணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களோ வர விருப்பமில்லாதிருந்தார்கள். அப்பொழுது அவன் வேறு வேலைக்காரர்களை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம் செய்தேன், என் எருதுகளும், கொழுத்த கன்றுக்குட்டிகளும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது; திருமணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான். அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைசெய்து, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்திற்கும் போய்விட்டார்கள். மற்றவர்கள் அவனுடைய வேலைக்காரர்களைப்பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள். ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் படைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகர்களை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான். அப்பொழுது, அவன் தன் வேலைக்காரர்களைப் பார்த்து: திருமணவிருந்து ஆயத்தமாக இருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு தகுதியற்றவர்களாக போனார்கள். ஆகவே, நீங்கள் வீதிகளிலேபோய், காணப்படுகிற அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான். அந்த வேலைக்காரர்கள் புறப்பட்டு, வழிகளிலேபோய், தாங்கள் கண்ட நல்லவர்கள் பொல்லாதவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டுவந்தார்கள்; திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிறைந்திருந்தது. விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே நுழைந்தபோது, திருமணஆடை அணிந்திராத ஒரு மனிதனை அங்கே பார்த்து: நண்பனே, நீ திருமணஆடை இல்லாதவனாக இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரர்களைப் பார்த்து: இவனுடைய கையையும் காலையும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான். அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.