அப்பொழுது, இயேசு அவர்களோடு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீடர்களைப் பார்த்து: நான் அங்கே போய் ஜெபம்செய்யும்வரை நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும் செபெதேயுவின் குமாரர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்திற்குரிய துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடுகூட விழித்திருங்கள் என்று சொல்லி, சிறிது விலகிப்போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிச் செய்யும்; ஆனாலும் என் விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார். பின்பு, அவர் சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவைப் பார்த்து: நீங்கள் ஒருமணி நேரமாவது என்னோடுகூட விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்செய்யுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். அவர் மறுபடியும் இரண்டாம்முறை போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார். அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது. அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப்போய், மூன்றாம்முறையும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்செய்தார். பின்பு அவர் தம்முடைய சீடர்களிடத்தில் வந்து: இன்னும் நித்திரைபண்ணி இளைப்பாறுகிறீர்களா? இதோ, மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற நேரம்வந்தது. என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார்.
அவர் இப்படிப் பேசும்போது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடுகூட பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பின திரளான மக்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள். அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தம்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான். இயேசு அவனைப் பார்த்து; நண்பனே, எதற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவைப் பிடித்தார்கள். அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கையை நீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காது அறுந்துபோக வெட்டினான். அப்பொழுது, இயேசு அவனைப் பார்த்து: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற அனைவரும் பட்டயத்தால் அழிந்துபோவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்களை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாக நடைபெறவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். அந்த நேரத்திலே இயேசு மக்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம் செய்துகொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆனாலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் நடைபெறுகிறது என்றார். அப்பொழுது, சீடர்களெல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.