பூமியிலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடர்களும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர்கள் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்களுடைய சொத்து எங்கேயிருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும். கண்ணானது சரீரத்தின் விளக்காக இருக்கிறது; உன் கண் தெளிவாக இருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாக இருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாக இருந்தால், அந்த இருள் எவ்வளவு அதிகமாக இருக்கும்! இரண்டு முதலாளிகளுக்கு வேலைசெய்ய ஒருவனாலும் முடியாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு, மற்றவனைப் புறக்கணிப்பான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களால் முடியாது. ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்களுடைய வாழ்க்கைக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; உணவைவிட வாழ்க்கையும், உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? வானத்துப் பறவைகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்களுடைய பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைவிட நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறது ஏன்? காட்டுப்பூக்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோன்கூட தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். விசுவாசக்குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப்புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாமல் இருங்கள். இவைகளையெல்லாம் தேவனை அறியாதவர் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு சேர்த்துக்கொடுக்கப்படும். ஆகவே, நாளைக்காகக் கவலைப்படாமல் இருங்கள்; நாளையதினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் மத் 6
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: மத் 6:19-34
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்