மாற் 14
14
அத்தியாயம் 14
இயேசு பெத்தானியாவில் அபிஷேகம்பண்ணப்படுதல்
1இரண்டு நாட்களுக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும், அவரைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி வழிதேடினார்கள். 2ஆனாலும் மக்களுக்குள்ளே கலவரம் உண்டாகாதபடி, பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள். 3அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டிலே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒரு பெண் விலையுயர்ந்த நளதம் என்னும் சுத்தமான தைலத்தை ஒரு வெள்ளைக்கல் ஜாடியில் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள். 4அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே கோபப்பட்டு: இந்தத் தைலத்தை இப்படி வீணாகச் செலவழிப்பது ஏன்? 5இதை முந்நூறு வெள்ளிக்காசுகளுக்கு அதிகமான விலைக்கு விற்று, ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைப்பற்றி முறுமுறுத்தார்கள். 6இயேசு அவர்களைப் பார்த்து: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவு பண்ணுகிறீர்கள்? என்னிடம் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். 7ஏழைகள் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள், உங்களுக்கு விருப்பம் உண்டாகும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்பொழுதும் உங்களிடம் இருக்கமாட்டேன். 8இவள் தன்னால் முடிந்ததைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு அடையாளமாக, என் சரீரத்தில் தைலம் பூச முந்திக்கொண்டாள். 9இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 10அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியர்களுக்குக் காட்டிக்கொடுப்பதற்காக அவர்களிடம் போனான். 11அவர்கள் அதைக்கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணம் கொடுக்கிறோம் என்று வாக்குக்கொடுத்தார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு ஏற்ற நேரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
கர்த்தருடைய பந்தி
12பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற முதலாம் நாளில், அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்குபோய் ஆயத்தம்பண்ண விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள். 13அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர் குடம் சுமந்துகொண்டு வருகிற ஒரு மனிதன் உங்களுக்கு எதிராக வருவான், அவன் பின்னே போங்கள்; 14அவன் எந்த வீட்டிற்குள் செல்கிறானோ அந்த வீட்டு முதலாளியை நீங்கள் பார்த்து: நான் என் சீடர்களுடன் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள். 15அவன் கம்பளம் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற வசதியான மேல்வீட்டறையை உங்களுக்குக் காட்டுவான்; அங்கே நமக்காக பஸ்காவை ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார். 16அப்படியே, அவருடைய சீடர்கள் புறப்பட்டு நகரத்தில்போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். 17மாலைநேரத்தில், அவர் பன்னிரண்டுபேரோடு சேர்ந்து அந்த இடத்திற்கு வந்தார். 18அவர்கள் பந்தி உட்கார்ந்து சாப்பிடும்போது, இயேசு அவர்களைப் பார்த்து: என்னோடு சாப்பிடுகிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 19அப்பொழுது அவர்கள் துக்கப்பட்டு: நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடம் கேட்கத்தொடங்கினார்கள். 20அவர் மறுமொழியாக: என்னோடு பாத்திரத்தில் கையைவிடுகிற பன்னிரண்டுபேர்களில் ஒருவனே என்று சொல்லி; 21மனிதகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆனாலும், எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ! அந்த மனிதன் பிறக்காமல் இருந்திருந்தால் அவனுக்கு நல்லதாக இருக்கும் என்றார். 22அவர்கள் சாப்பிடும்போது, இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார். 23பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லோரும் அதிலே பானம்பண்ணினார்கள். 24அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது. 25நான் தேவனுடைய ராஜ்யத்தில் புதிய இரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரை திராட்சைப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 26அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.
இயேசு பேதுருவின் மறுதலிப்பை முன்னறிவித்தல்
27அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லோரும் என்னால் இடறல் அடைவீர்கள். 28ஆனாலும் நான் உயிரோடு எழுந்தபின்பு, உங்களுக்கு முன்பாக கலிலேயாவிற்குப் போவேன் என்றார். 29அதற்கு பேதுரு: உமதுநிமித்தம் எல்லோரும் இடறல் அடைந்தாலும், நான் இடறல் அடையமாட்டேன் என்றான். 30இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பு, நீ மூன்றுமுறை என்னை மறுதலிப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 31அதற்கு அவன்: நான் உம்மோடு மரித்துப்போவதாக இருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாகச் சொன்னான்; எல்லோரும் அப்படியே சொன்னார்கள்.
கெத்செமனே
32பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நான் ஜெபம்பண்ணும்வரை இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; 33பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோய், கலக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார். 34அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்திற்கான துக்கத்தில் உள்ளது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி, 35சற்று தள்ளிப்போய், தரையிலே விழுந்து, அந்த நேரம் தம்மைவிட்டுக் கடந்துபோகக்கூடுமானால் அது கடந்துபோகவேண்டும் என்று வேண்டிக்கொண்டு: 36அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே முடியும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படி அல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும் என்றார். 37பின்பு அவர் வந்து, அவர்கள் தூங்குகிறதைப் பார்த்து, பேதுருவைப் பார்த்து: சீமோனே, தூங்குகிறாயா? ஒருமணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? 38நீங்கள் சோதனையில் விழாமலிருக்க விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், சரீரமோ பலவீனமுள்ளது என்றார். 39அவர் மீண்டும்போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார். 40அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மீண்டும் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர்களுடைய கண்கள் தூக்கமயக்கத்தில் இருந்ததால், தாங்கள் மறுமொழியாக அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் இருந்தார்கள். 41அவர் மூன்றாம்முறை வந்து: இன்னும் நித்திரைசெய்து இளைப்பாறுகிறீர்களா? போதும், நேரம்வந்தது, இதோ, மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார். 42என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போகலாம் என்றார்.
இயேசு கைதுசெய்யப்படுதல்
43உடனே, அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனுடன் பிரதான ஆசாரியர்களும், வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அனுப்பின மக்கள்கூட்டத்தினர், பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள். 44அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் யாரை முத்தம் செய்கிறேனோ அவன்தான், அவனைப் பிடித்துக் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். 45அவன் வந்தவுடனே, இயேசுவின் அருகில் சென்று: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான். 46அப்பொழுது மக்கள்கூட்டத்தினர் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். 47அப்பொழுது அருகில் நின்ற சீடன் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டினான். 48இயேசு அவர்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் போகிறதைப்போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; 49நான் தினமும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாக இருக்கிறது என்றார். 50அப்பொழுது எல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். 51ஒரு வாலிபன் ஒரு போர்வையைமட்டும் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னால் போனான்; அவனைப் பிடித்தார்கள். 52அவன் தன் போர்வையைப் போட்டுவிட்டு, நிர்வாணமாக அவர்களைவிட்டு ஓடிப்போனான்.
ஆலோசனை சங்கத்தில் இயேசு
53இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே பிரதான ஆசாரியர்கள், மூப்பர்கள், வேதபண்டிதர்கள் எல்லோரும் கூடிவந்திருந்தார்கள். 54பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் வந்து, காவலர்களுடன் உட்கார்ந்து, நெருப்பின் அருகில் குளிர்க்காய்ந்துகொண்டிருந்தான். 55அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் ஆலோசனை சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்கிறதற்கு அவருக்கு எதிராகச் சாட்சிகளைத் தேடினார்கள்; சாட்சிசொல்ல ஒருவரும் வரவில்லை. 56அநேகர் அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒத்துபோகவில்லை. 57அப்பொழுது சிலர் எழுந்து, கைகளால் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைகளால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று, 58அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொன்னார்கள். 59அப்படிச் சொல்லியும் அவர்களுடைய சாட்சிகள் ஒத்துபோகவில்லை. 60அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவைப் பார்த்து: இவர்கள் உனக்கு எதிராகச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். 61அவரோ ஒரு பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். மீண்டும் பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். 62அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனிதகுமாரன் சர்வவல்லவரின் வலதுபக்கத்தில் உட்கார்ந்து இருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் பார்ப்பீர்கள் என்றார். 63பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு: இதைவிட வேறுசாட்சிகள் நமக்கு வேண்டுமா? 64தேவனை அவமதிப்பதைக் கேட்டீர்களே, இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றுக் கேட்டான். அதற்கு அவர்கள் எல்லோரும்: இவன் மரணத்திற்குத் தகுதியானவன் என்று தீர்மானம்பண்ணினார்கள். 65அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரை அடிக்கவும், தீர்க்கதரிசனம் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரர்களும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.
பேதுரு இயேசுவை மறுதலித்தல்
66அந்தநேரத்தில் பேதுரு கீழே உள்ள அரண்மனை முற்றத்தில் இருக்கும்போது, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒரு பெண் வந்து, 67குளிர்க்காய்ந்துகொண்டிருந்த பேதுருவை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடு இருந்தவன் என்றாள். 68அதற்கு அவன்: எனக்கு ஒன்றும் புரியவில்லை; நீ சொல்வது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வாசல் மண்டபத்திற்கு வெளியேப் போனான்; அப்பொழுது சேவல் கூவியது. 69வேலைக்காரி அவனை மீண்டும் பார்த்து: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள். 70அவன் மீண்டும் மறுதலித்தான். சிறிதுநேரத்திற்குப்பின்பு மீண்டும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து: உண்மையாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள். 71அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனிதனை எனக்குத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். 72உடனே சேவல் இரண்டாம்முறை கூவியது. சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையை பேதுரு நினைத்துப்பார்த்து, மிகவும் அழுதான்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
மாற் 14: IRVTam
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.