மாற் 16

16
அத்தியாயம் 16
இயேசுவின் உயிர்த்தெழுதல்
1ஓய்வுநாளுக்குப்பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்கு வாசனைத் திரவியங்களை வாங்கிக்கொண்டு. 2வாரத்தின் முதலாம்நாளின் அதிகாலையிலே சூரியன் உதிக்கிறபோது கல்லறைக்கு வந்து, 3கல்லறையின் வாசலில் இருக்கிற கல்லை நமக்காக யார் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 4அந்தக் கல் மிகவும் பெரிதாக இருந்தது; அவர்கள் பார்த்தபோது, அந்தக் கல் தள்ளப்பட்டிருப்பத்தைப் பார்த்தார்கள். 5அவர்கள் கல்லறைக்குள் சென்று, வெள்ளை அங்கி அணிந்த ஒரு வாலிபன் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து பயந்தார்கள். 6அவன் அவர்களைப் பார்த்து: பயப்படாமல் இருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிரோடு எழுந்தார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம். 7நீங்கள் அவருடைய சீடர்களிடமும் பேதுருவிடமும்போய்: உங்களுக்கு முன்னே அவர் கலிலேயாவிற்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைப் பார்ப்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான். 8அவர்கள் பயந்து நடுங்கி, சீக்கிரமாக வெளியே வந்து, கல்லறையைவிட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமல் போனார்கள். 9வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு உயிரோடு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதலாக தரிசனமானார். 10அவளிடமிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டுப்போய், இயேசுவுடன் இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கும்போது, அவர்களுக்கு அந்தச் செய்தியைச் சொன்னாள். 11அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் அவள் இயேசுவைப் பார்த்தாள் என்றும் அவள் சொன்னபோது, இவர்கள் நம்பவில்லை. 12அதற்குப்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்திற்கு நடந்து போகிறபொழுது அவர்களுக்கு வேறு உருவத்தில் தரிசனமானார். 13அவர்களும்போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை. 14அதற்குப்பின்பு பதினொருபேரும் சாப்பிடும்போது அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிரோடு எழுந்திருந்த அவரைப் பார்த்தவர்களை அவர்கள் நம்பாமல் போனதினால் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார். 15பின்பு, அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உலகமெங்கும்போய், எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணுங்கள். 16விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசிக்காதவனோ தண்டனைக்குள்ளாவான். 17விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள் என்னவென்றால்: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; புதிய மொழிகளைப் பேசுவார்கள்; 18சர்ப்பங்களை எடுப்பார்கள்; மரணத்திற்குரிய எதைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; நோயாளிகளின்மேல் கரங்களை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சுகமடைவார்கள் என்றார்.
பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுதல்
19இவ்விதமாக கர்த்தர் அவர்களோடு பேசினபின்பு, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார். 20சீடர்கள் புறப்பட்டுப்போய், எல்லா இடங்களிலும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்கள் மூலம் கிரியைசெய்து, அவர்களால் நடந்த அற்புத அடையாளங்களினால் வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

மாற் 16: IRVTam

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்