நெகே 6:4-19

நெகே 6:4-19 IRVTAM

அவர்கள் இந்தவிதமாக நான்குமுறை எனக்குச் சொல்லியனுப்பினார்கள்; நானும் இந்த விதமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினேன். ஐந்தாம் முறையும் சன்பல்லாத்து அந்த விதமாகவே தன்னுடைய வேலைக்காரனையும், அவன் கையிலே முத்திரைபோடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான். அதிலே: நீரும் யூதர்களும் கலகம்செய்ய நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் மதிலைக் கட்டுகிறீர் என்றும், இந்த விதமாக நீர் அவர்களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும், யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக்குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீரென்றும் யூதரல்லாதவர்களுக்குள்ளே பிரபலமாக இருக்கிறது, கஷ்மூவும் அப்படிச் சொல்லுகிறான்; இப்போதும் இந்தச் செய்தி ராஜாவிற்கு எட்டுமே; ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனை செய்வதற்காக நீர் வரவேண்டும் என்று எழுதியிருந்தது. அதற்கு நான்: நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை; அவைகள் உம்முடைய மனதின் கற்பனையே அல்லாமல் வேறல்ல என்று சொல்லியனுப்பினேன். அந்த வேலை நடைபெறாமலிருக்க, எங்கள் கைகள் சோர்ந்துபோகும் என்று சொல்லி, அவர்கள் எல்லோரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே, நீர் என்னுடைய கைகளைத் பலப்படுத்தியருளும். மெகதாபெயேலின் மகனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன்னுடைய வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன்; அப்பொழுது அவன்: நாம் இருவருமாக தேவனுடைய வீடாகிய ஆலயத்திற்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான். அதற்கு நான்: என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன். தேவன் அவனை அனுப்பவில்லையென்றும், தொபியாவும் சன்பல்லாத்தும் அவனுக்குக் பணம்கொடுத்ததால், அவன் எனக்கு விரோதமாக அந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொன்னான் என்றும் அறிந்துகொண்டேன். நான் பயந்து அவர்கள் சொன்னதைச்செய்து பாவம் செய்வதற்கும், என்னை அவமானப்படுத்த காரணத்தை ஏற்படுத்துவதற்கும் அவனுக்கு பணம் கொடுத்திருந்தார்கள். என்னுடைய தேவனே, தொபியாவும் சன்பல்லாத்தும் செய்த இந்தச் செய்கைகளுக்குத்தகுந்ததாக நீர் அவர்களையும், நொவதியாள் என்னும் தீர்க்கதரிசியானவளையும், எனக்கு பயமுண்டாக்கப்பார்த்த மற்றத் தீர்க்கதரிசிகளையும் நினைத்துக்கொள்ளும். அப்படியே மதிலானது ஐம்பத்திரண்டு நாட்களுக்குள்ளே கட்டப்பட்டு, எலூல் மாதம் இருபத்தைந்தாந்தேதியிலே முடிந்தது. எங்கள் எதிரிகள் எல்லோரும் அதைக் கேட்டபோதும், எங்களை சுற்றிலும் இருக்கிற யூதரல்லாதவர்கள் அனைவரும் கண்டபோதும், மிகவும் நம்பிக்கையற்றுப்போய், இந்த செயல் எங்கள் தேவனால் கைகூடி வந்ததென்று அறிந்தார்கள். அந்த நாட்களில் யூதாவிலுள்ள பெரிய மனிதர்களிடத்திலிருந்து தொபியாவுக்குப் போகிறதும், தொபியாவினிடத்திலிருந்து அவர்களுக்கு வருகிறதுமான கடிதங்கள் அநேகமாயிருந்தது. அவன் ஆராகின் மகனாகிய செகனியாவுக்கு மருமகனாக இருந்ததும் அல்லாமல், அவன் மகனாகிய யோகனான் பெரகியாவின் மகனாகிய மெசுல்லாமின் மகளை திருமணம் செய்திருந்ததாலும், யூதாவில் அநேகர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள். அவன் செய்யும் நன்மைகளையும் அவர்கள் எனக்கு முன்பாக விவரித்து, என்னுடைய வார்த்தைகளை அவனுக்குக் கொண்டுபோவார்கள்; தொபியா எனக்குப் பயமுண்டாகக் கடிதங்களை அனுப்புவான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த நெகே 6:4-19