யாக்கேயின் மகனாகிய ஆகூர் என்னும் ஆண்மகன் ஈத்தியேலுக்கு வசனித்து, ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்ன உபதேச வாக்கியங்கள்: மனிதர்கள் எல்லோரையும்விட நான் மூடன்; மனிதர்களுக்கேற்ற புத்தி எனக்கு இல்லை. நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை. வானத்திற்கு ஏறி இறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை துணியிலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் நிறுவியவர் யார்? அவருடைய பெயர் என்ன? அவருடைய மகனுடைய பெயர் என்ன? அதை அறிவாயோ? தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்கிறவர்களுக்கு அவர் கேடகமானவர். அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய். இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; நான் மரணமடையும்வரைக்கும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும். மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் செல்வத்தையும் எனக்குக் கொடுக்காமல் இருப்பீராக. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, யெகோவா யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரமடைகிறதினால் திருடி, என்னுடைய தேவனுடைய நாமத்தை வீணாக கெடுக்காதபடிக்கும், என்னுடைய படியை எனக்கு அளந்து எனக்கு உணவளியும். எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றம் சுமத்தாதே; அவன் உன்னைச் சபிப்பான், நீ குற்றவாளியாகக் காணப்படுவாய். தங்களுடைய தகப்பனைச் சபித்தும், தங்களுடைய தாயை ஆசீர்வதிக்காமலும் இருக்கிற சந்ததியாரும் உண்டு. தாங்கள் அழுக்கு நீங்க கழுவப்படாமல் இருந்தும், தங்களுடைய பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாரும் உண்டு. வேறொரு சந்ததியாரும் உண்டு; அவர்களுடைய கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்களுடைய இமைகள் எத்தனை பெருமையுமானவைகள். தேசத்தில் சிறுமையானவர்களையும் மனிதர்களில் எளிமையானவர்களையும் சாப்பிடுவதற்கு வாளுக்கு ஒப்பான பற்களையும் கத்திகளுக்கு ஒப்பான கடைவாய்ப்பற்களையும் உடைய சந்ததியாரும் உண்டு. கொடு, கொடு, என்கிற இரண்டு மகள்கள் அட்டைக்கு உண்டு. திருப்தி அடையாத மூன்று உண்டு, போதும் என்று சொல்லாத நான்கும் உண்டு. அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே. தகப்பனைப் பரியாசம்செய்து, தாயின் கட்டளையை அசட்டைசெய்கிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் சாப்பிடும். எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு, என்னுடைய புத்திக்கு எட்டாதவைகள் நான்கும் உண்டு. அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனிதனுடைய வழியுமே. அப்படியே விபசார பெண்ணுடைய வழியும் இருக்கிறது; அவள் சாப்பிட்டு, தன்னுடைய வாயைத் துடைத்து; நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் நீதி 30
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: நீதி 30:1-20
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்