வெளி 19
19
அத்தியாயம் 19
தேவனை மகிமைப்படுத்துதல்
1இவைகளுக்குப் பின்பு, பரலோகத்தில் திரளான மக்கள்கூட்டம் ஆரவாரத்தோடு சத்தமிடுகிறதைக் கேட்டேன். அவர்கள்:
“அல்லேலூயா, இரட்சிப்பும் மகிமையும்
கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது;
அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
2தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து,
தம்முடைய ஊழியக்காரர்களின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே” என்றார்கள். 3மறுபடியும் அவர்கள்:
“அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.
4இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் முகங்குப்புறவிழுந்து:
ஆமென், அல்லேலூயா,” என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
5மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரர்களே,
அவருக்குப் பயப்படுகிற சிறியோர்களே பெரியோர்களே,
நீங்கள் எல்லோரும் அவரைத் துதியுங்கள்”
என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து வந்தது.
6அப்பொழுது திரளான மக்கள் போடும் ஆரவாரம்போலவும்,
பெரியவெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் உண்டாகி:
அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.
7நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம்.
ஆட்டுக்குட்டியானவருடைய திருமணம் வந்தது,
அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்” என்று சொல்லக்கேட்டேன்.
8சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடை அணிந்துகொள்ளும்படி அவளுக்கு தரப்பட்டது; அந்த மெல்லிய ஆடை பரிசுத்தவான்களுடைய நீதிகளே. 9பின்னும், அவன் என்னைப் பார்த்து: “ஆட்டுக்குட்டியானவருடைய திருமணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்” என்று எழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான். 10அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னைப் பார்த்து: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரர்களோடு நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாக இருக்கிறது என்றான்.
வெள்ளைக் குதிரையின்மேல் ஏறியிருந்தவர்
11பின்பு, பரலோகம் திறந்திருப்பதைப் பார்த்தேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமும் உள்ளவர் என்று அழைக்கப்பட்டவர்; அவர் நீதியாக நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். 12அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தன, அவருடைய தலையின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்கும் தெரியாத ஒரு பெயரும் எழுதியிருந்தது. 13இரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தார்; அவருடைய பெயர் தேவனுடைய வார்த்தை என்பதே. 14பரலோகத்திலுள்ள படைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய ஆடை அணிந்தவர்களாக, வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள். 15அந்நிய மக்களை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான வாள் புறப்படுகிறது; இரும்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடுமையான கோபமாகிய மதுபான ஆலையை மிதிக்கிறார். 16ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய ஆடையின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது. 17பின்பு ஒரு தேவதூதன் சூரியனில் நிற்பதைப் பார்த்தேன்; அவன் வானத்தின் நடுவில் பறக்கிற எல்லாப் பறவைகளையும் பார்த்து: 18நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், படைத் தளபதிகளின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுதந்திரமானவர்கள், அடிமைகள், சிறியோர், பெரியோர், இவர்களுடைய மாம்சத்தையும் அழிக்கும்படிக்கு, தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தமாகக் கூப்பிட்டான். 19பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய படைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய படைகளோடும் யுத்தம்பண்ணுவதற்கு வருவதைப் பார்த்தேன். 20அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள். 21மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற வாளினால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
வெளி 19: IRVTam
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.