வெளி 9:12-21

வெளி 9:12-21 IRVTAM

முதலாம் ஆபத்து கடந்துபோனது; இவைகளுக்குப் பின்பு இன்னும் இரண்டு ஆபத்துகள், இதோ வருகிறது. ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது தேவனுக்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலும் இருந்து ஒரு சத்தம் உண்டாகி, எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனைப் பார்த்து: ஐபிராத்து என்னும் பெரிய நதியிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்வதைக்கேட்டேன். அப்பொழுது மனிதர்களில் மூன்றில் ஒரு பங்கைக் கொல்வதற்காக ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருடத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள். குதிரைப்படைகளாகிய இராணுவங்களின் எண்ணிக்கை கோடானகோடியாக இருந்தது; அவைகளின் எண்ணிக்கையைச் சொல்லக்கேட்டேன். குதிரைகளையும், அவைகளின்மேல் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் பார்த்தவிதமாவது; அவர்கள் அக்கினி சிவப்பு நிறமும், நீலநிறமும், கந்தக மஞ்சள் நிறமுமான மார்புக்கவசங்களை உடையவர்களாக இருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போல இருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டு வந்தது. அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்டுவந்த அக்கினி, புகை, கந்தகம் என்னும் இந்த மூன்றினாலும் மனிதர்களில் மூன்றில் ஒரு பங்கு கொல்லப்பட்டார்கள். அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலும் வால்களிலும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகள்போலவும், தலைகள் உள்ளவைகளாகவும் இருக்கிறது, அவைகளாலே மனிதர்களைச் சேதப்படுத்துகிறது. அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்றமனிதர்கள், பேய்களையும் பொன் வெள்ளி செம்பு கல் மரம் போன்றவைகளால் செய்யப்பட்டவைகளும், பார்க்கவும் கேட்கவும் நடக்கவும் முடியாதவைகளுமாக இருக்கிற விக்கிரகங்களையும்; வணங்காமல் இருப்பதற்குத் தங்களுடைய கைகளின் செய்கைகளைவிட்டு மனம்திரும்பவும் இல்லை; தங்களுடைய கொலைபாதகங்களை, தங்களுடைய சூனியங்களை, தங்களுடைய வேசித்தனங்களை, தங்களுடைய களவுகளைவிட்டும் மனம்திரும்பவில்லை.