செப்ப 3:14-20

செப்ப 3:14-20 IRVTAM

மகளாகிய சீயோனே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலர்களே, ஆர்ப்பரியுங்கள்; மகளாகிய எருசலேமே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. யெகோவா உன் ஆக்கினைகளை அகற்றி, உன் எதிரிகளை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய யெகோவா உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய். அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும். உன் தேவனாகிய யெகோவா உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்னைக்குறித்து சந்தோஷமாக மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் உன்னை புதியவனாக்குவார்; அவர் உன்னைக்குறித்து கெம்பீரமாகக் களிகூருவார். உன் சபையின் மனிதர்களாயிருந்து, பண்டிகை ஆசரிப்பில்லாமையால் உண்டான நிந்தையினிமித்தம் சஞ்சலப்பட்டவர்களை நான் ஏகமாகக் கூட்டிக்கொள்ளுவேன். இதோ, அக்காலத்திலே உன்னைச் சிறுமைப்படுத்தின அனைவரையும் தண்டிப்பேன்; நொண்டியானவனை இரட்சித்து, தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்ளுவேன்; அவர்கள் வெட்கம் அநுபவித்த எல்லா தேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச்செய்வேன். அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்; அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன்; உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல மக்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.