1 நாளாகமம் 22:1-9

1 நாளாகமம் 22:1-9 TCV

அப்பொழுது தாவீது, “யெகோவாவாகிய இறைவனின் ஆலயமும், இஸ்ரயேலுக்கான தகன பலிபீடமும் இருக்கவேண்டிய இடம் இதுவே” என்றான். பின்பு தாவீது இஸ்ரயேலில் வாழ்கிற அந்நியர்களை ஒன்றுகூட்டும்படி கட்டளையிட்டு, அவர்களிலிருந்து இறைவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்குரிய பொழிந்த கற்களை ஆயத்தப்படுத்துபவர்களை நியமித்தான். தாவீது வாசல் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளையும், கீல்களையும் செய்வதற்கு ஏராளமான இரும்பையும், அளவிடமுடியாத வெண்கலத்தையும் சேர்த்துவைத்தான். அதோடு தாவீது எண்ணிலடங்கா கேதுரு மரங்களை சேர்த்துவைத்தான். சீதோனியரும், தீரியரும் தாவீதுக்கு இவற்றை ஏராளமாகக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது தாவீது, “எனது மகன் சாலொமோன் வாலிபனும் அனுபவமற்றவனுமாய் இருக்கிறான். யெகோவாவுக்காகக் கட்டப்படப்போகும் ஆலயமோ எல்லா நாடுகளின் பார்வையிலும் மிகப் பிரமாண்டமானதாகவும், புகழ் பெற்றதாகவும், மேன்மையுள்ளதாகவும் இருக்கவேண்டும். எனவே அதற்கான ஆயத்தங்களை நான் செய்வேன்” என்றான். அவ்வாறே தாவீது தான் இறப்பதற்கு முன்பு அதிக அளவான ஆயத்தங்களையெல்லாம் செய்துவைத்திருந்தான். பின்பு அவன் தன் மகன் சாலொமோனை அழைத்து, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு ஆலயத்தைக் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தான். தாவீது சாலொமோனிடம், “என் மகனே, நான் என் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நினைத்திருந்தேன். ஆனால் யெகோவாவின் இந்த வார்த்தை எனக்கு வந்தது. ‘நீ பல யுத்தங்களைச் செய்து போர்முனையில் அதிகமான இரத்தத்தைச் சிந்தினாய். எனது பெயருக்கு ஆலயத்தைக் கட்டுவது நீயல்ல. ஏனெனில் என் பார்வையில் பூமியில் நீ அதிக இரத்தத்தைச் சிந்தியிருக்கிறாய். ஆனால் உனக்கு ஒரு மகன் பிறப்பான்; அவன் சமாதானமும் அமைதியும் உள்ளவனாய் இருப்பான். நான் எல்லா பகுதிகளிலுமுள்ள பகைவர்களிடமிருந்து அவனுக்கு ஆறுதல் கொடுப்பேன். அவனுடைய பெயர் சாலொமோன் எனப்படும். அவனுடைய ஆட்சிக்காலத்தில் இஸ்ரயேலுக்கு சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவேன்.