1 கொரிந்தியர் 12:12-27

1 கொரிந்தியர் 12:12-27 TCV

உடல் ஒன்று, ஆனாலும் அது பல உறுப்புகளால் ஆக்கப்பட்டிருக்கிறது. உடலின் உறுப்புகள் பலவாயினும், அது ஒரே உடல்தான். அதுபோலவே, கிறிஸ்துவும் ஒரே உடலாகவே இருக்கிறார். நாம் யூதராகவோ, கிரேக்கராகவோ, அடிமைகளாகவோ, சுதந்திர உரிமை உள்ளவர்களாகவோ இருந்தாலும், எல்லோரும் ஒரே ஆவியானவராலே, ஒரே உடலுக்குள்ளாக திருமுழுக்கு பெற்றிருக்கிறோம். நாம் எல்லோரும் அனுபவிக்கும்படி, ஒரே ஆவியானவரே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறார். ஏனெனில், உடல் ஒரு உறுப்பினால் மட்டும் ஆனதல்ல. அது பல உறுப்புகளைக் கொண்டது. காலானது, நான் கையாக இல்லாததினால், நான் உடலுக்குச் சொந்தமல்ல என்று சொன்னால், அந்தக் காரணத்தினால் அது உடலுக்குச் சொந்தமாகாமல் போவதில்லை. காதானது, “நான் கண்ணாக இல்லாததினால், நான் உடலுக்குச் சொந்தமல்ல” என்று சொன்னால், அந்தக் காரணத்தினாலும் அது உடலுக்குச் சொந்தமாகாமல் போகாது. முழு உடலுமே ஒரு கண்ணாயிருக்குமானால், அந்த உடலுக்குக் கேட்கும் உணர்வு எங்கிருக்கும்? முழு உடலுமே ஒரு காதாய் இருக்குமானால், அதற்கு முகர்ந்து பார்க்கும் உணர்வு எங்கிருக்கும்? ஆனால், இறைவனோ தாம் விரும்பியபடியே, உடலின் ஒவ்வொரு உறுப்பையும், அதில் ஒரு அங்கமாக அமைத்திருக்கிறார். முழு உடலுமே ஒரே உறுப்பாக மட்டும் இருக்குமானால், அது உடலாய் இருக்கமுடியாது. உறுப்புகள் பலவாய் இருப்பினும், உடல் ஒன்றாகவே இருக்கிறது. எனவே கண்ணானது கையைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்லமுடியாது. அல்லது தலையானது காலைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்லமுடியாது. உண்மையாகவே, பலவீனமாய் காணப்படுகின்ற உடலின் உறுப்புகளே நமக்கு மிகவும் தேவையானவைகளாய் இருக்கின்றன. உடலின் மதிப்புக்குறைந்த உறுப்புகள் என்று நாம் எவற்றை நினைக்கிறோமோ, அவற்றையே நாம் அதிக மதிப்புடன் பராமரிக்கிறோம். உடலில் மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் என நாம் எவற்றை எண்ணுகிறோமோ, அவற்றை அதிக கவனத்துடன் மறைத்துப் பராமரிக்கிறோம். அப்படியான விசேஷ பராமரிப்பு, உடலின் மறைந்திராத உறுப்புகளுக்குத் தேவையில்லை. ஆனால் இறைவனோ, மதிப்புக்குறைந்த உறுப்புகளுக்கு, அதிக மதிப்பைக் கொடுக்கும் வகையில் உடலின் உறுப்புகளை அமைத்திருக்கிறார், ஆகவே உடலில் பிரிவினை இல்லாமல், உடலின் பல உறுப்புகளும் ஒன்றுக்கொன்று, ஒரேவிதமான அக்கறையுடன் இருக்கவேண்டும். உடலின் ஒரு உறுப்பு வேதனைப்படும்போது, எல்லா உறுப்புகளுமே வேதனைப்படுகின்றன; ஒரு உறுப்பு கனத்தைப் பெறும்போது, மற்றெல்லா உறுப்புகளுமே அதனுடன் மகிழ்ச்சியடைகின்றன. இப்பொழுது, நீங்கள் கிறிஸ்துவின் உடலாய் இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும், அந்த உடலின் ஒரு பகுதியாய் இருக்கிறீர்கள்.