மனைவியே, உன் கணவர் இரட்சிப்புக்குள் வருவாரோ இல்லையோ என்று உனக்கு எப்படித் தெரியும்? கணவனே, உன் மனைவி இரட்சிப்புக்குள் வருவாளோ இல்லையோ என்று உனக்கு எப்படித் தெரியும்?
ஆனால் ஒவ்வொருவனும், கர்த்தர் தனது வாழ்வில் திட்டமிட்டதன்படியும், இறைவன் தன்னை அழைத்த அழைப்பின்படியும், தன் வாழ்க்கையை நடத்தவேண்டும். எல்லாத் திருச்சபைகளிலும் இந்த ஒழுங்கையே நான் ஏற்படுத்துகிறேன். ஒருவன் தான் அழைக்கப்பட்டபோது விருத்தசேதனம் பெற்றிருந்தால், அவன் விருத்தசேதனமில்லாதவனாயிருக்க முயற்சிக்கக்கூடாது. ஒருவன் தான் அழைக்கப்பட்டபோது விருத்தசேதனம் செய்யாதவனாய் இருந்தால், அவன் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டாம். ஒருவன் விருத்தசேதனம் பெற்றிருப்பதோ, விருத்தசேதனம் பெறாமல் இருப்பதோ முக்கியமல்ல. அவன் இறைவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுதலே முக்கியம். இந்த காரியங்களில், ஒவ்வொருவனும் இறைவனால் அழைக்கப்பட்டபோது, தான் இருந்த நிலைமையிலேயே நிலைத்திருக்க வேண்டும்.
நீ அழைக்கப்பட்டபொழுது அடிமையாய் இருந்தாயா? கவலைப்பட வேண்டாம்; நீ சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு உண்டானால், அதைப் பெற்றுக்கொள். ஏனெனில் கர்த்தரால் அழைக்கப்பட்டபோது ஒருவன் அடிமையாயிருந்தால், அவன் கர்த்தரின் சுயாதீன மனிதனாகிறான்; அவ்வாறே அழைக்கப்படும்பொழுது, சுயாதீன மனிதனாயிருந்தவன் கிறிஸ்துவின் அடிமையாகிறான். நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறீர்கள்; ஆகவே நீங்கள் மனிதருக்கு அடிமைகளாகாதிருங்கள். சகோதரர்களே, ஒவ்வொருவனும் இறைவனுக்கு பொறுப்புள்ளவனாக, தான் இறைவனால் எந்த நிலையிலேயே அழைக்கப்பட்டானோ, அவன் அந்த நிலையிலேயே நிலைத்திருக்க வேண்டும்.
கன்னிகைகளைக் குறித்தோ: நான் கர்த்தரிடமிருந்து கட்டளை எதையும் பெறவில்லை. ஆனால் கர்த்தருடைய இரக்கத்தினாலே, உங்கள் நம்பிக்கைக்குரியவனாகிய நான், எனது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறேன். தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் இருக்கிறபடியே இருப்பதுதான் நல்லது என நான் எண்ணுகிறேன். நீ திருமணம் செய்திருந்தால், விவாகரத்தை நாடவேண்டாம். திருமணம் செய்யாதிருந்தால், ஒரு மனைவியைப் பெற முயற்சிக்க வேண்டாம். நீ திருமணம் செய்தால், நீ பாவம் செய்யவில்லை; ஒரு கன்னிகை திருமணம் செய்தால், அவளும் பாவம் செய்யவில்லை. ஆனால் திருமணம் செய்கிறவர்கள் இந்த வாழ்க்கையில் அநேக பாடுகளை அனுபவிக்கவேண்டி நேரிடும். இந்தப் பாடுகளை நீங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.
ஆனால் பிரியமானவர்களே, நான் சொல்கிறதென்னவெனில், காலமோ குறுகினதாயிருக்கிறது. ஆகவே, இப்பொழுதிருந்தே மனைவிகளை உடையவர்கள் மனைவிகள் இல்லாதவர்கள்போல் வாழவேண்டும்; துக்கமுள்ளவர்கள், துக்கமில்லாதவர்கள்போல் இருக்கவேண்டும்; சந்தோஷப்படுகிறவர்கள், சந்தோஷமில்லாதவர்கள்போல் இருக்கவேண்டும்; எதையேனும் வாங்குகிறவர்கள், அது தங்களுக்குச் சொந்தமில்லையென்பதுபோல் இருக்கவேண்டும்; உலக காரியங்களில் ஈடுபடுகிறவர்கள், அவைகளில் முழுவதும் மூழ்கிப் போகாதபடி கவனமாய் இருக்கவேண்டும். ஏனெனில், இவ்வுலகத்தின் தற்போதைய நிலை கடந்துபோகிறதே.
கவலைகளிலிருந்து நீங்கள் விலகியிருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். திருமணமாகாத ஒருவன், கர்த்தருடைய காரியங்களைக்குறித்தே அக்கறை உள்ளவனாயிருக்கிறான். கர்த்தரை எவ்வாறு பிரியப்படுத்தலாம் என எண்ணுகிறான். ஆனால் திருமணம் செய்தவனோ, இவ்வுலகக் காரியங்களைக்குறித்தே அக்கறை உள்ளவனாயிருக்கிறான். தன் மனைவியை எவ்வாறு பிரியப்படுத்தலாம் என எண்ணுகிறான். அவனுடைய நாட்டங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. திருமணமாகாத ஒரு பெண் அல்லது ஒரு கன்னிகை கர்த்தருடைய காரியங்களைக்குறித்தே அக்கறையாயிருக்கிறாள்: உடலிலும் ஆவியிலும் தன்னைக் கர்த்தருக்கு அர்ப்பணிப்பதே அவளுடைய நோக்கமாய் இருக்கிறது. ஆனால் திருமணம் செய்த ஒரு பெண்ணோ இவ்வுலகக் காரியங்களைக்குறித்தே அக்கறையாயிருக்கிறாள். தன் கணவனை எவ்வாறு பிரியப்படுத்துவது என எண்ணுகிறாள். உங்கள் சொந்த நன்மைக்காகவே நான் இதைச் சொல்கிறேன். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. நீங்களோ கர்த்தருக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் சரியான வழியில் வாழவேண்டும்.
யாராவது தனக்கென நியமிக்கப்பட்ட கன்னிகையுடன் தான் தவறாக நடக்கக்கூடும் என்று பயந்தாலும், அவளுக்கு வயது போய்க்கொண்டிருக்கிறது என்பதனாலும், தான் விரும்புகிறபடி அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ளலாம். அது பாவமில்லை. அவர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். ஆனால், யாராவது இந்த விஷயத்தில் தன் மனதில் திருமணம் அவசியமில்லை என்ற உறுதியான தீர்மானத்தோடு, தன் ஆசைகளைக் கட்டுப்படுத்துகிறவனாக இருந்து, கன்னிகையை இப்போதைக்குத் திருமணம் செய்வதில்லை எனத் தீர்மானித்தால், அவனும் சரியானதையே செய்கிறான். ஆகவே கன்னிகையைத் திருமணம் செய்கிறவன் சரியானதையே செய்கிறான். ஆனால் அவளைத் திருமணம் செய்யாதவன் அதையும்விட அதிக நலமானதைச் செய்கிறான்.
தன் கணவன் உயிரோடிருக்கும் காலம்வரைக்கும், ஒரு பெண் தன் கணவனுக்குக் கட்டுப்பட்டவளாகவே இருக்கிறாள். ஆனால் அவளுடைய கணவன் இறந்துபோனால், தான் விரும்பும் யாரையாவது திருமணம் செய்வதற்கு அவளுக்குச் சுதந்திரம் உண்டு. ஆனால் அவள் திருமணம் செய்துகொள்பவன் கர்த்தருக்குச் சொந்தமானவனாக இருக்கவேண்டும். ஆனால் எனது அபிப்பிராயத்தின்படி, அவள் அப்படியே திருமணம் செய்யாதவளாய் இருந்தால், மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பாள். நானும் இறைவனுடைய ஆவியானவரைப் பெற்றிருக்கிறேன் என்ற எண்ணத்திலேயே இந்த யோசனையைக் கொடுக்கிறேன்.