1 பேதுரு 2:11-24

1 பேதுரு 2:11-24 TCV

பிரியமான நண்பர்களே, இந்த உலகத்தில் அந்நியரும் பிறநாட்டவருமாய் இருக்கிற நீங்கள் பாவ ஆசைகளிலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று உங்களை நான் வேண்டிக்கொள்கிறேன். இந்தப் பாவ ஆசைகளே உங்கள் ஆத்துமாவுக்கு எதிராகப் போரிடுகின்றன. இறைவனை அறியாத மக்கள் மத்தியில் நீங்கள் நல்ல வாழ்க்கையை வாழுங்கள்; அப்பொழுது அவர்கள் உங்களைத் தீமை செய்கிறவர்கள் என்று குற்றம் சாட்டினாலும் அவர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, இறைவன் நம்மைச் சந்திக்கும் நாளில், இறைவனை மகிமைப்படுத்துவார்கள். கர்த்தர்நிமித்தம் மனிதரிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கிற எல்லா அதிகாரங்களுக்கும் பணிந்து நடவுங்கள்: மிக மேலான அதிகாரத்திலுள்ள அரசரானாலும் சரி, அல்லது தீமை செய்கிறவர்களைத் தண்டிக்கும்படியும், நன்மை செய்கிறவர்களைப் பாராட்டும்படியும் அரசனால் அனுப்பப்படுகிற ஆளுநரானாலும் சரி, அவர்களுக்குப் பணிந்து நடவுங்கள். ஏனெனில் நன்மை செய்வதினாலே, நீங்கள் மூடரின் அறிவீனப் பேச்சை அடக்கவேண்டும் என்பது இறைவனுடைய சித்தமாய் இருக்கிறது. சுதந்திரமுடைய மனிதராய் வாழுங்கள்; ஆனால் உங்கள் சுதந்திரத்தை தீமையை மூடும் ஒரு போர்வையாகப் பயன்படுத்தாதீர்கள்; இறைவனின் ஊழியராக வாழுங்கள். எல்லோருக்கும் ஏற்ற மதிப்பைக்கொடுத்து நடவுங்கள்; விசுவாசிகளான சகோதரரில் அன்பாய் இருங்கள். இறைவனுக்குப் பயந்து வாழுங்கள். அரசரைக் கனம்பண்ணுங்கள். அடிமைகளே, உங்கள் எஜமான்களுக்குரிய மரியாதையைக் கொடுத்து, அவர்களுக்குப் பணிந்து நடவுங்கள். நல்லவர்களுக்கும் தயவுள்ளவர்களுக்கும் மாத்திரமல்ல, கடுமையானவர்களுக்கும் அடங்கி நடவுங்கள். ஏனெனில், ஒருவன் அநியாயத்தினால் வரும் கஷ்டங்களின் வேதனையை இறைவனை மனதில் கொண்டவனாய் சகித்தால், அது பாராட்டுக்குரியது. ஆனால் நீங்கள் தவறு செய்வதற்காக சிட்சிக்கப்படுகிறபோது அதைச் சகித்தால், அதனால் உங்களுக்கு என்ன பாராட்டு ஏற்படமுடியும்? ஆனால் நீங்கள் நன்மை செய்வதற்காக வேதனை அனுபவிக்கிறபோது, அதைச் சகித்துக்கொண்டால், அது இறைவனுக்கு முன்பாக பாராட்டுக்கு உரியதாய் இருக்கும். இதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். ஏனெனில் கிறிஸ்து உங்களுக்காக பாடுகளை அனுபவித்து, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றியே நடக்கவேண்டுமென்று, உங்களுக்கான ஒரு முன்மாதிரியை விட்டுச்சென்றுள்ளார். “அவர் ஒரு பாவமும் செய்யவில்லை. அவருடைய வாயில் வஞ்சனை காணப்படவும் இல்லை.” அவர்கள் அவரை ஏளனம் செய்தபோதும், அவர் பழிவாங்கவில்லை; அவர் வேதனைகளை அனுபவித்தபோது, அவர் பயமுறுத்தவில்லை. அவரோ நீதியாய் நியாயத்தீர்ப்புச் செய்கிற இறைவனுக்கே தம்மை ஒப்புக்கொடுத்தார். நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்கு வாழும்படி, அவர்தாமே தமது உடலில் நமது பாவங்களை ஏற்றுக்கொண்டு, அவற்றைச் சிலுவை மரத்தின்மேல் சுமந்தார். “அவருடைய காயங்களால் நீங்கள் சுகமடைந்திருக்கிறீர்கள்.”