1 பேதுரு 4:5-12

1 பேதுரு 4:5-12 TCV

ஆனால் அவர்கள் உயிர் வாழ்கிறவர்களையும் இறந்து போனவர்களையும் நியாயந்தீர்க்க ஆயத்தமாய் இருப்பவருக்கு கணக்குக் கொடுக்கவேண்டும். இதன் காரணமாகவே, இப்பொழுது இறந்துபோனவர்களுக்குங்கூட, அவர்கள் உயிரோடிருக்கையில் நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டது. அதனால் அவர்களின் உடலைப் பொறுத்தவரையில், எல்லா மனிதருக்கும் ஏற்படுகிற நியாயத்தீர்ப்பின்படி அவர்கள் மரணம் அடைந்திருந்தாலும், ஆவியைப் பொறுத்தவரையில் அவர்கள் இறைவனுடைய சித்தப்படி இன்னும் வாழமுடியும். எல்லாக் காரியங்களுக்கும் முடிவு நெருங்கிவிட்டது. ஆகையால் நீங்கள் மன்றாடுவதற்கு ஏற்றவாறு மனத்தெளிவுடையவர்களாயும், தன்னடக்கமுடையவர்களாயும் இருங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவரில் ஒருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள். ஏனெனில் அன்பு, அநேக பாவங்களை மூடுகிறது. முறுமுறுக்காமல் ஒருவரையொருவர் உபசரித்து நடவுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட வரத்தை உபயோகித்து, ஒருவருக்கொருவர் பணிசெய்யுங்கள். இவ்வாறு, வெவ்வேறு விதங்களில் வரும் இறைவனுடைய கிருபையை, உண்மையுடன் நிர்வகிக்கிறவர்களாக இருங்கள். பேசுகின்ற வரத்தையுடையவன், இறைவனுடைய சொந்த வார்த்தையைப் பேசுகிறேன் என்றே பேசவேண்டும். ஊழியம் செய்கிறவன் இறைவன் கொடுக்கும் பெலத்தின்படியே அதைச் செய்யவேண்டும். அப்பொழுது எல்லாக் காரியங்களிலும், இயேசுகிறிஸ்துவின் மூலமாக இறைவன் துதிக்கப்படுவார். அவருக்கே மகிமையும் வல்லமையும் என்றென்றும் உண்டாயிருப்பதாக. ஆமென். பிரியமானவர்களே, நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களைக்குறித்து, ஏதோ விசித்திரமான ஒரு காரியம் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டதென எண்ணி வியப்படைய வேண்டாம்.