1 சாமுயேல் 1:1-16

1 சாமுயேல் 1:1-16 TCV

எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள ராமதாயீமைச் சேர்ந்த சோப்பீம் ஊரிலே ஒரு மனிதனிருந்தான். அவனுடைய பெயர் எல்க்கானா. இவன் எரோகாமின் மகன். எரோகாம் எலிகூவின் மகன். எலிகூ தோகுவின் மகன். தோகு எப்பிராயீமியனான சூப்பின் மகன். அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். ஒருத்தியின் பெயர் அன்னாள்; மற்றவளின் பெயர் பெனின்னாள். பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள். அன்னாளுக்கோ பிள்ளைகள் ஒருவரும் இருக்கவில்லை. எல்க்கானா ஒவ்வொரு வருடமும் சேனைகளின் யெகோவாவுக்குப் பலி செலுத்தவும், அவரை வழிபடவும் தன் ஊரிலிருந்து சீலோவுக்குப் போய்வருவான். அங்கே ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும், பினெகாசும் யெகோவாவின் ஆசாரியர்களாக இருந்தார்கள். எல்க்கானா பலிசெலுத்தும் நாள் வரும்போதெல்லாம் இறைச்சியின் பங்குகளை மனைவி பெனின்னாளுக்கும் அவளுடைய எல்லா மகன்களுக்கும், மகள்களுக்கும் கொடுப்பான். ஆனால் எல்க்கானா அன்னாளின்மேல் அன்பு செலுத்தியபடியால் அவளுக்கு இரண்டு மடங்கு பங்கைக் கொடுத்தான். யெகோவா அவளுக்குப் பிள்ளைப்பேற்றைக் கொடுத்திருக்கவில்லை. யெகோவா அவளுக்குப் பிள்ளைப்பேற்றைக் கொடுக்காதபடியால், பெனின்னாள் அவள் மனம் வருந்தும்படி அவளுக்குச் சினமூட்டிக் கொண்டிருந்தாள். இவ்விதமாக ஒவ்வொரு வருடமும் நடந்தது. அன்னாள் யெகோவாவினுடைய ஆலயத்துக்குப் போகும்போதெல்லாம் பெனின்னாள் அவளுக்குச் சினமூட்டினாள். இதனால் அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள். இதைக் கண்டவுடன் அவள் கணவன் எல்க்கானா அவளிடம், “அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாமல் இருக்கிறாய்? ஏன் கவலைப்படுகிறாய்? பத்து மகன்களிலும் பார்க்க நான் உனக்கு மேலானவன் அல்லவா?” என்று கேட்பான். ஒருமுறை சீலோவிலே அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின், அன்னாள் எழுந்தாள். அந்நேரம் ஆசாரியன் ஏலி, யெகோவாவினுடைய ஆலயத்தின் கதவு நிலையருகிலிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது அன்னாள் மனங்கசந்து மிகவும் அழுது, யெகோவாவிடம் மன்றாடினாள். அவள் யெகோவாவிடம், “சேனைகளின் யெகோவாவே, உம்முடைய அடியாளின் அவலத்தைப் பார்த்து என்னை நினைவுகூர்ந்து, உமது அடியாளை மறவாமல் எனக்கு ஒரு மகனைக் கொடுப்பீரானால், நான் அவன் வாழ்நாள் முழுவதும் அவனை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன். சவரக்கத்தி ஒருபோதும் அவன் தலையில் படாது” என்று ஒரு நேர்த்திக்கடன் செய்தாள். அவள் அவ்வாறு யெகோவாவிடம் மன்றாடும்போது, ஏலி அவள் வாயைக் கவனித்தான். அன்னாள் தன் உள்ளத்தில் மன்றாடிக்கொண்டிருந்தாள். அதனால் அவள் உதடுகள் அசைந்துகொண்டிருந்தன. ஆனால் அவளுடைய சத்தம் கேட்கவில்லை. அதனால் அவள் மதுபோதையில் இருக்கிறாள் என ஏலி நினைத்தான். அப்பொழுது ஏலி அவளிடம், “நீ எவ்வளவு காலத்துக்கு மது குடிப்பதை விடாதிருப்பாய்? உன் குடிப்பழக்கத்தை விட்டுவிடு” என்றான். அதற்கு அன்னாள், “இல்லை ஐயா, நானோ கவலை நிறைந்த மனதையுடைய பெண். நான் திராட்சை இரசமோ, மதுவோ குடிக்கவில்லை. நான் யெகோவாவுக்குமுன் என் துயரத்தைச் சொல்லி அழுகிறேன். உம்முடைய அடியாளை கெட்ட நடத்தையுள்ள பெண் என எண்ணவேண்டாம். நான் மிகுந்த துயரத்தினாலும் கவலையினாலும் மன்றாடுகிறேன்” என்றாள்.