1 சாமுயேல் 1:7-20

1 சாமுயேல் 1:7-20 TCV

இவ்விதமாக ஒவ்வொரு வருடமும் நடந்தது. அன்னாள் யெகோவாவினுடைய ஆலயத்துக்குப் போகும்போதெல்லாம் பெனின்னாள் அவளுக்குச் சினமூட்டினாள். இதனால் அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள். இதைக் கண்டவுடன் அவள் கணவன் எல்க்கானா அவளிடம், “அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாமல் இருக்கிறாய்? ஏன் கவலைப்படுகிறாய்? பத்து மகன்களிலும் பார்க்க நான் உனக்கு மேலானவன் அல்லவா?” என்று கேட்பான். ஒருமுறை சீலோவிலே அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின், அன்னாள் எழுந்தாள். அந்நேரம் ஆசாரியன் ஏலி, யெகோவாவினுடைய ஆலயத்தின் கதவு நிலையருகிலிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது அன்னாள் மனங்கசந்து மிகவும் அழுது, யெகோவாவிடம் மன்றாடினாள். அவள் யெகோவாவிடம், “சேனைகளின் யெகோவாவே, உம்முடைய அடியாளின் அவலத்தைப் பார்த்து என்னை நினைவுகூர்ந்து, உமது அடியாளை மறவாமல் எனக்கு ஒரு மகனைக் கொடுப்பீரானால், நான் அவன் வாழ்நாள் முழுவதும் அவனை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன். சவரக்கத்தி ஒருபோதும் அவன் தலையில் படாது” என்று ஒரு நேர்த்திக்கடன் செய்தாள். அவள் அவ்வாறு யெகோவாவிடம் மன்றாடும்போது, ஏலி அவள் வாயைக் கவனித்தான். அன்னாள் தன் உள்ளத்தில் மன்றாடிக்கொண்டிருந்தாள். அதனால் அவள் உதடுகள் அசைந்துகொண்டிருந்தன. ஆனால் அவளுடைய சத்தம் கேட்கவில்லை. அதனால் அவள் மதுபோதையில் இருக்கிறாள் என ஏலி நினைத்தான். அப்பொழுது ஏலி அவளிடம், “நீ எவ்வளவு காலத்துக்கு மது குடிப்பதை விடாதிருப்பாய்? உன் குடிப்பழக்கத்தை விட்டுவிடு” என்றான். அதற்கு அன்னாள், “இல்லை ஐயா, நானோ கவலை நிறைந்த மனதையுடைய பெண். நான் திராட்சை இரசமோ, மதுவோ குடிக்கவில்லை. நான் யெகோவாவுக்குமுன் என் துயரத்தைச் சொல்லி அழுகிறேன். உம்முடைய அடியாளை கெட்ட நடத்தையுள்ள பெண் என எண்ணவேண்டாம். நான் மிகுந்த துயரத்தினாலும் கவலையினாலும் மன்றாடுகிறேன்” என்றாள். அப்பொழுது ஏலி அவளிடம், “நீ சமாதானத்தோடே போ. இஸ்ரயேலின் இறைவனிடம் நீ கேட்டுக்கொண்டதை அவர் உனக்குத் தருவாராக” என்றான். அதற்கு அவள், “உமது அடியாளுக்கு உமது கண்களில் தயவு கிடைப்பதாக” என்றாள். அன்னாள் அவ்விடமிருந்து போய் சிறிது உணவு சாப்பிட்டாள். அதன்பின் அவள் முகம் துக்கமுகமாக இருக்கவில்லை. அவர்கள் மறுநாள் அதிகாலையில் எழுந்து யெகோவாவுக்கு முன்பாக வழிபட்டபின், அவ்விடத்தைவிட்டு ராமாவிலுள்ள தங்கள் வீட்டுக்குப் போனார்கள். எல்க்கானா, தன் மனைவி அன்னாளை நேசித்து, அவளோடு இணைந்தான். ஆண்டவர் அன்னாளின் வேண்டுதலை நினைத்தார். சிலநாட்கள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றாள். “யெகோவாவிடமிருந்து அவனைக் கேட்டுப் பெற்றேன்” என்று சொல்லி அவனுக்கு, சாமுயேல் என்று பெயரிட்டாள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 1 சாமுயேல் 1:7-20

அன்னாள் 1 சாமுயேல் 1:7-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

அன்னாள்

5 நாட்கள்

அன்னாள் என்பவள் எல்க்கானாவின் இரண்டு மனைவிகளில் ஒருத்தி. இவள் சக்களத்தியாகிய பெனின்னாளுக்கு பிள்ளைகள் உண்டு. இந்தக் குடும்பம் முழுவதும் வருஷந்தோறும் சிலோவிலே கர்த்தரை பணிந்து கொள்ளவும் பலியிடவும் போய் வருவார்கள். ஆகவே இவர்கள் தேவபக்தியுள்ளவர்களாகவும், காளைகளை பலியிடுவதனால் (1 சாமு 1:24) இவர்கள் ஐஸ்வர்யவான்கள் என்றும் விளங்குகிறது. கர்த்தரோ அன்னாளுடைய கர்ப்பத்தை அடைத்தார் என்று வேதம் சொல்லுகிறது(1 சாமு 1:5). ஆனால் அன்னாள், தன் மலட்டுத்தன்மையை ஏற்றுக் கொள்ளாமல், தன்னுடைய வாழ்க்கையில் இருந்த விசாரத்தை அவள் எப்படி வெற்றியாக மாற்றினாள் என்பதை தியானிக்கலாம் . இன்று உங்களுக்கு இருக்கும் நிந்தை, அவமானம், தோல்வி விரக்திக்கு காரணம் என்ன? அவைகளை ஜெயிக்கும் வழி அன்னாளின் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள முடியும். அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள். சங்கீதம் 84:6. அதோடு கூட,அவள் கடந்து போன இச்சூழ்நிலையின் மூலமாக அவளுடைய குண நலன்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.