2 இராஜாக்கள் 20:1-6

2 இராஜாக்கள் 20:1-6 TCV

அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு சாகும் தருவாயில் இருந்தான். ஆமோஸின் மகனான இறைவாக்கினன் ஏசாயா அவனிடம் போய், “யெகோவா கூறுவது இதுவே: நீர் சாகப்போகிறீர்; பிழைக்கமாட்டீர். ஆகையால் உன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும் என்கிறார்” என்றான். எசேக்கியா தன் முகத்தை சுவரின் பக்கமாகத் திருப்பி யெகோவாவிடம் மன்றாடினான். அவன், “யெகோவாவே, நான் உமக்குமுன் உண்மையுள்ளவனாய் நடந்து, பயபக்தியாய் முழுமனதுடன் உமது பார்வையில் நலமானதையே செய்தேன் என்பதை நினைவுகூரும்” என்று எசேக்கியா மனங்கசந்து அழுதான். ஏசாயா அரண்மனை முற்றத்தின் நடுப்பகுதியைக் கடந்துசெல்ல முன்பே யெகோவாவின் வார்த்தை அவனுக்கு வந்தது. அவர் அவனிடம், “நீ திரும்பிப்போய் என் மக்களின் தலைவனாகிய எசேக்கியாவிடம், ‘உன் தகப்பனாகிய தாவீதின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: நான் உனது வேண்டுதலைக் கேட்டேன், உன் கண்ணீரையும் கண்டேன்; நான் உன்னைச் சுகப்படுத்துவேன். இன்றிலிருந்து மூன்றாம் நாள் நீ யெகோவாவின் ஆலயத்துக்குப் போவாய். உன் வாழ்நாட்களோடு இன்னும் பதினைந்து வருடங்களைக் கூட்டுவேன். அசீரிய அரசனின் கையிலிருந்து உன்னையும், இந்தப் பட்டணத்தையும் விடுவிப்பேன். எனக்காகவும், என் தாசனாகிய தாவீதுக்காகவும் இந்தப் பட்டணத்துக்கு ஆதரவாக இருப்பேன்’ என்று கூறுகிறார் என்று சொல்” என்றார்.