2 இராஜாக்கள் 4:8-37

2 இராஜாக்கள் 4:8-37 TCV

ஒரு நாள் எலிசா சூனேம் என்ற ஊருக்குப் போனான். அங்கு ஒரு செல்வம் மிகுந்த பெண் இருந்தாள். அவள் அவனை சாப்பிடவரும்படி வருந்தி அழைத்தாள். அதன்பின்பு அவ்வழியில் அவன் போகும்போதெல்லாம் அங்கே சாப்பிடுவதற்காகத் தங்குவான். அவள் தன் கணவனிடம், “இந்த வழியாக வந்து இங்கு தங்கிப்போகும் மனிதன், இறைவனுடைய பரிசுத்த மனிதன் என்பது எனக்குத் தெரிகிறது. நாங்கள் எங்கள் வீட்டுக்குமேல் ஒரு அறையைக் கட்டி, ஒரு கட்டில், மேஜை, நாற்காலி, விளக்கு ஆகியவற்றை அவருக்கு வைப்போம். அதனால் எங்களிடம் வரும்போதெல்லாம் அங்கேயே அவர் தங்கியிருக்கலாம்” என்றாள். ஒரு நாள் எலிசா அங்கு வந்தபோது மேலே தன் அறைக்குப் போய் அங்கே படுத்திருந்தான். தன் வேலைக்காரனான கேயாசிடம், “அந்த சூனேமியாளை அழைத்து வா” என்றான். அவன் போய் அவளை அழைத்துவர, அவள் வந்து எலிசாவுக்கு முன் நின்றாள். அப்பொழுது எலிசா கேயாசியைப் பார்த்து, “நீ அவளிடம் சொல்லவேண்டியதாவது: ‘எங்களுக்காக நீ எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டாய். உனக்கு நாங்கள் என்ன செய்யலாம்? உனது சார்பாக அரசனிடமோ அல்லது இராணுவத் தளபதியிடமோ நாங்கள் ஏதேனும் சொல்ல வேண்டியிருந்தால் அதைச் சொல்’ என்று அவளிடம் கேள்” என்றான். அவள் அதற்குப் பதிலாக, “நான் என் சொந்த மக்கள் மத்தியில் குடியிருக்க எனக்கு வீடு இருக்கிறது” என்றாள். அப்பொழுது எலிசா கேயாசிடம், “அவளுக்கு என்ன செய்யலாம்?” என்று கேட்டான். அதற்கு கேயாசி, “அவளுக்கு ஒரு மகன் இல்லை. அவளுடைய கணவனும் வயதுசென்றவனாக இருக்கிறான்” என்றான். எலிசா அவனிடம், “அவளைக் கூப்பிடு” என்றான். கேயாசி அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து கதவுக்குப் பக்கத்தில் நின்றாள். எலிசா அவளைப் பார்த்து, “அடுத்த வருடம் இந்த நேரத்தில் உன் கைகளில் ஒரு மகனை ஏந்திக்கொண்டிருப்பாய்” என்றான். அப்பொழுது அவள், “என் தலைவனே! இறைவனுடைய மனிதனே, உமது அடியவளைத் தவறாக வழிநடத்த வேண்டாம்” என்றாள். ஆனால் அவளோ எலிசா முன்கூறியபடியே கர்ப்பமாகி அடுத்த வருடம் அதே காலத்தில் ஒரு மகனைப் பெற்றாள். அந்தப் பிள்ளை வளர்ந்து வந்தான். ஒரு நாள் அவன் கதிர் அறுக்கிறவர்களுடன் நின்றுகொண்டிருந்த தன் தகப்பனிடம் போனான். அந்நேரம் அவன் தன் தகப்பனிடம், “என் தலை! என் தலை வலிக்கிறது” என்று அழுதான். அவனுடைய தகப்பன் ஒரு வேலையாளிடம், “இவனை இவனுடைய தாயிடம் தூக்கிக்கொண்டு போ” என்றான். அந்த வேலைக்காரன் அப்பிள்ளையைத் தூக்கி அவனுடைய தாயிடம் கொண்டுபோனான். மத்தியானம்வரை தாய் அவனைத் தன் மடியில் வைத்திருந்தாள். மதிய நேரத்தில் அவன் இறந்துபோனான். அவள் மேலே போய் இறைவனுடைய மனிதனின் கட்டிலில் மகனைக் கிடத்திவிட்டு, கதவைப் பூட்டி வெளியே போனாள். அவள் தன் கணவனைக் கூப்பிட்டு, “தயவுசெய்து உம்முடைய வேலையாட்களில் ஒருவனையும், ஒரு கழுதையையும் அனுப்பும். நான் இறைவனுடைய மனிதனிடம் அவசரமாகப் போய்த் திரும்பி வரவேண்டும்” என்றாள். அப்பொழுது அவன், “ஏன் இன்று அவரிடம் போகிறாய்? இன்று ஓய்வுநாளல்ல; அமாவாசை நாளும் அல்ல” என்று கேட்டான். அதற்கு அவள், “அது பரவாயில்லை. நான் போகவேண்டியிருக்கிறது” என்று கூறினாள். கழுதையில் சேணம் கட்டி, வேலைக்காரனைப் பார்த்து, “விரைவாகப் போ, நான் சொன்னாலொழிய வேகத்தைக் குறைக்காதே” என்று சொன்னாள். அந்தப்படியே அவள் புறப்பட்டு கர்மேல் மலையில் இருந்த இறைவனுடைய மனிதனிடம் போனாள். இறைவனின் மனிதன் தூரத்திலே அவளைக் கண்டு தன் வேலைக்காரனான கேயாசியைப் பார்த்து, “பார்! அதோ சூனேமியாள். நீ அவளைச் சந்திக்கும்படியாக ஓடிப்போய் அவளிடம், ‘நீ சுகமாயிருக்கிறாயா? உன் கணவன் சுகமாயிருக்கிறானா? உன் பிள்ளை சுகமாயிருக்கிறானா?’ ” என்று கேள் என்றான். அவள், “நாங்கள் எல்லோரும் சுகமாயிருக்கிறோம்” என்று கூறினாள். அவள் மலையின்மேல் இருந்த இறைவனுடைய மனிதனிடம் வந்தபோது, அவனுடைய கால்களைப் பிடித்துக்கொண்டாள். கேயாசி அவளை அப்பால் தள்ளிவிடுவதற்காக முன்பாக வந்தபோது இறைவனுடைய மனிதன் அவனைப் பார்த்து, “அவளை விடு, அவளுடைய ஆத்துமா வேதனையால் கசப்படைந்திருக்கிறது. ஆனால் யெகோவா அதை எனக்கு மறைத்ததோடு ஏன் என்றும் எனக்குச் சொல்லவில்லை” என்றான். அப்பொழுது அவள், “என் தலைவனே, எனக்கு ஒரு மகன் வேண்டுமென்று நான் உம்மிடம் கேட்டேனா? எனக்கு அதிக எதிர்பார்ப்பைக் கொடுக்கவேண்டாமென்று நான் உமக்குச் சொல்லவில்லையா?” என்றாள். எலிசா கேயாசியிடம்: “உன் மேலுடையைப் பட்டிக்குள் சொருகிக்கொண்டு என் தடியையும் எடுத்துக்கொண்டு ஓடு. யாரையாகிலும் நீ சந்தித்தால் அவனை வாழ்த்தாதே. யாராவது உன்னை வாழ்த்தினால் நீ மறுமொழி கொடுக்காதே. நீ ஓடிப்போய் பையனின் முகத்தின்மேல் என் தடியை வை” என்றான். ஆனால் அந்தப் பிள்ளையின் தாயோ எலிசாவைப் பார்த்து, “யெகோவா வாழ்கிறதும், நீர் வாழ்கிறதும் நிச்சயம்போலவே நான் உம்மை விட்டுப் போகமாட்டேன் என்பதும் நிச்சயம்” என்றாள். எனவே அவன் எழுந்து அவளைப் பின்தொடர்ந்தான். கேயாசி அவர்களுக்குமுன் போய், எலிசாவின் தடியைப் பையனின் முகத்தின்மேல் வைத்தான். ஆனால் எந்த விதமான சத்தமோ, பதிலோ வரவில்லை. அதனால் கேயாசி திரும்பிப்போய் எலிசாவைச் சந்தித்து, “பையன் கண்விழிக்கவில்லை” எனக் கூறினான். எலிசா வீட்டுக்கு வந்தபோது அவனுடைய கட்டிலின்மேல் அந்தப் பையன் இறந்து கிடந்தான். அவன் உள்ளே போய் இருவரையும் வெளியே விட்டுக் கதவைப் பூட்டி யெகோவாவை நோக்கி மன்றாடினான். அதன்பின் அவன் கட்டிலின்மேல் ஏறி அந்தப் பையனின் வாயோடு வாயும், கண்களோடு கண்களும், கைகளோடு கைகளுமாக வைத்து பையனின்மேல் படுத்தான். உடனே அந்தப் பையனின் உடல் சூடாகியது. எலிசா எழுந்து தன் அறைக்குள் அங்குமிங்குமாக நடந்தான். அதன்பின் கட்டிலில் ஏறி பையனின்மேல் இன்னொருமுறை முன்போல படுத்தான். அப்பொழுது அந்தப் பையன் ஏழுமுறை தும்மி தன் கண்களைத் திறந்தான். அப்பொழுது எலிசா கேயாசியை வரும்படி அழைத்து, “சூனேமியாளைக் கூப்பிடு” என்றான். அவன் அப்படியே செய்தான். அவள் வந்தபோது எலிசா, “உன் மகனைக் கூட்டிக்கொண்டுபோ” என்றான். அவள் உள்ளே வந்து எலிசாவின் கால்களில் விழுந்து தரைமட்டும் பணிந்தாள். பின்பு தன் மகனைக் கூட்டிக்கொண்டு வெளியே போனாள்.