2 தீமோத்தேயு 2:1-13

2 தீமோத்தேயு 2:1-13 TCV

ஆகையால் என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவில் இருக்கும் கிருபையிலே பெலன்கொள். அநேக சாட்சிகளுக்கு முன்னால் நான் போதித்தவற்றை நீ கேட்டறிந்தாய். இவற்றை மற்றவர்களுக்குக் போதிக்கத் திறமையுள்ளவர்களான நம்பத்தகுந்த மனிதரிடம் ஒப்புவி. கிறிஸ்து இயேசுவின் நல்ல போர்வீரனைப்போல், என்னுடனேகூட துன்பங்களைத் தாங்கிக்கொள். போர்வீரனாக பணிசெய்யும் யாரும், பொது வாழ்க்கை விவகாரங்களில் ஈடுபடமாட்டான். அவன் தனது அதிகாரியையே பிரியப்படுத்த விரும்புகிறான். அதேபோல் யாரும், விளையாட்டு வீரனாக போட்டியில் ஈடுபடும்போது, அவன் ஒழுங்குமுறையின்படி விளையாடாவிட்டால், வெற்றி வீரனுக்குரிய கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளமாட்டான். கஷ்டப்பட்டு வேலைசெய்யும் விவசாயியே விளைச்சலின் பங்கை முதலில் பெறவேண்டும். நான் சொல்வதைச் சிந்தித்துப்பார் ஏனெனில் இவை எல்லாவற்றிலும் கர்த்தர் உனக்கு நுண்ணறிவைத் தருவாராக. இயேசுகிறிஸ்துவை நினைவிற்கொள். அவர் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் தாவீதின் சந்ததியில் வந்தவர். இதுவே எனது நற்செய்தி. இதற்காகவே நான் குற்றவாளியைப்போல் விலங்கிடப்படும் அளவுக்கு துன்பப்படுகிறேன். ஆனால் இறைவனின் வார்த்தையோ விலங்கிடப்படவில்லை. ஆகையால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக, நான் எல்லாவற்றையும் சகிக்கிறேன். அவர்கள் கிறிஸ்து இயேசுவில் இருக்கும் இந்த இரட்சிப்பை நித்திய மகிமையுடன் பெற்றுக்கொள்ளும்படியே நான் இவற்றைச் சகிக்கிறேன். இதுவும் நம்பத்தகுந்த ஒரு வாக்கு: நாம் கிறிஸ்துவுடன் மரித்திருந்தால், நாமும் அவருடன் வாழ்வோம். நாம் பாடுகளைத் தாங்கினால், நாமும் அவருடன் ஆளுகை செய்வோம். நாம் கிறிஸ்துவை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; நாம் அவருக்கு உண்மையாய் இராவிட்டாலும், அவர் நமக்கு உண்மையுள்ளவராகவே இருப்பார். ஏனெனில், அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.