அப்போஸ்தலர் 5:1-11

அப்போஸ்தலர் 5:1-11 TCV

அனனியா என்னும் பெயருடைய ஒருவன், தனது மனைவி சப்பீராளுடன் சேர்ந்து, ஒரு சிறு நிலத்தை விற்றான். விற்ற பணத்தில் ஒரு பகுதியைத் தனது மனைவி அறியத் தனக்கென வைத்துக்கொண்டு, மறு பகுதியைக் கொண்டுவந்து முழுவதையும் கொடுப்பதுபோல, அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தான். அப்பொழுது பேதுரு அவனிடம், “அனனியாவே, பரிசுத்த ஆவியானவரிடம் பொய் சொல்லும்படி, சாத்தான் உனது இருதயத்தை நிரப்பியது எப்படி? நிலத்தை விற்றுப் பெற்றுக்கொண்ட பணத்தில் ஒரு பகுதியை நீ உனக்கென வைத்துக்கொண்டாயே. அதை விற்குமுன்பு அது உனக்குச் சொந்தமாக இருக்கவில்லையோ? அது விற்கப்பட்ட பின்பும், அந்தப் பணம் உன்னிடம் இருக்கவில்லையோ? இப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்ய நீ ஏன் நினைத்தாய்? நீ மனிதரிடம் பொய் சொல்லவில்லை, இறைவனிடமே பொய் சொன்னாய்” என்றான். அனனியா இதைக் கேட்டபோது, அவன் கீழே விழுந்து இறந்துப்போனான். நடந்ததைக் கேள்விப்பட்ட எல்லோருக்கும் மிகவும் பயமுண்டாயிற்று. அப்பொழுது இளைஞர் முன்வந்து, அவனது உடலைத் துணியில் சுற்றி, தூக்கிக்கொண்டுபோய் அடக்கம் செய்தார்கள். கிட்டத்தட்ட மூன்றுமணி நேரத்திற்குப்பின், நடந்தது என்ன என்று அறியாமல், அவனுடைய மனைவி உள்ளே வந்தாள். பேதுரு அவளிடம், “நிலத்தை விற்று நீயும் அனனியாவும் பெற்றுக்கொண்ட பணம் இவ்வளவுதானா?” என்று கேட்டான். அதற்கு அவள், “ஆம், இவ்வளவுதான் அதன் விலை” என்றாள். அப்பொழுது பேதுரு அவளிடம், “கர்த்தருடைய ஆவியானவரைச் சோதிப்பதற்கு எப்படி நீயும் உடன்பட்டாய்? இதோ, உனது கணவனை அடக்கம் செய்தவர்கள் வாசற்படியிலே நிற்கின்றனர். அவர்கள் உன்னையும் சுமந்துகொண்டு போவார்கள்” என்றான். அந்த வினாடியே அவளும் பேதுருவின் பாதத்தில் விழுந்து செத்துப்போனாள். அப்பொழுது அந்த இளைஞர் உள்ளே வந்து, அவள் இறந்துகிடப்பதைக் கண்டு, அவளையும் வெளியே தூக்கிக்கொண்டுபோய் அவளது கணவனுக்குப் பக்கத்தில் அடக்கம் செய்தார்கள். திருச்சபையோருக்கும் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள் எல்லோருக்கும் மிகவும் பயம் ஏற்பட்டது.