பிரசங்கி 5:1-7
பிரசங்கி 5:1-7 TCV
இறைவனின் ஆலயத்திற்குச் செல்லும்போது, உன் நடையில் கவனமாய் இரு. மூடரைப் போல பலி செலுத்துவதைவிட, செவிகொடுத்துக் கேட்க அங்கு போ; ஏனெனில் அவர்கள் தாங்கள் செய்கிறது தவறு என்று அறியாதிருக்கிறார்கள். இறைவனுக்குமுன் எதையாவது சொல்வதற்கு உன் இருதயத்தில் அவசரப்பட்டு, உன் வாயை விரைவாய்த் திறவாதே. இறைவன் பரலோகத்தில் இருக்கிறார், நீ பூமியிலிருக்கிறாய்; எனவே உன் வார்த்தைகள் அளவாய் இருக்கட்டும். அதிக கவலைகள் மிகுதியாகும்போது, கனவு வருவதுபோல, சொற்கள் மிகுதியானால் மூடத்தனம் வெளிப்படும். இறைவனுக்கு நீ நேர்ந்ததை நிறைவேற்றத் தாமதியாதே. இறைவன் மூடரில் பிரியமாயிருப்பதில்லை; உனது நேர்த்திக்கடனை நிறைவேற்று. நேர்த்திக்கடனைச் செய்து, அதை நிறைவேற்றாமல் விடுவதைவிட, நேர்த்திக்கடன் செய்யாமல் இருப்பது மிக நல்லது. உன்னை பாவத்திற்குள் வழிநடத்த உன் வாய்க்கு இடங்கொடாதே. ஆலய தூதனுக்கு முன்பாக, “எனது நேர்த்திக்கடன் தவறுதலாகச் செய்யப்பட்டது” என்று மறுத்துச் சொல்லாதே. இறைவன் நீ சொல்வதைக் கேட்டு கோபப்பட்டு, அவர் உன் கையின் வேலையை ஏன் அழித்துப் போடவேண்டும்? அதிக கனவும், அதிக வார்த்தைகளும் அர்த்தமற்றவை. எனவே இறைவனுக்குமுன் பயந்திரு.


