எபேசியர் 2

2
கிறிஸ்துவிற்குள் உயிர்ப்பிக்கப்படுதல்
1நீங்களோ ஒருகாலத்தில் உங்களுடைய மீறுதல்களிலும், பாவங்களிலும் மரித்தவர்களாக இருந்தீர்கள். 2அப்பொழுது நீங்கள், இந்த உலகத்தின் வழிமுறைகளைக் கைக்கொண்டு ஆகாயத்து ஆட்சியின் அதிகாரிக்கு கீழ்ப்படிந்து நடந்தீர்கள். அந்த தீய ஆவியே இப்பொழுது கீழ்ப்படியாதவர்களில் செயலாற்றுகிறது. 3ஒருகாலத்தில் நாம் எல்லோரும் அவர்களிடையே வாழ்ந்தோம். நமது மாம்சத்திலிருந்து எழும் இச்சைகளைத் தீர்த்துக்கொள்கிறவர்களாகவும், மாம்சத்திலிருந்து எழும் ஆசைகளின்படியும் யோசனைகளின்படியும், நடக்கிறவர்களாகவும் இருந்தோம். மற்றவர்களைப் போலவே, இறைவனுடைய கோபத்துக்கு உட்பட்டவர்களாய் இருந்தோம். 4ஆனால் இரக்கத்தில் ஐசுவரியமுள்ள இறைவன், நமக்கு மிகுந்த அன்பு காண்பித்தார். 5எப்படியென்றால், நாம் மீறுதல்களினால் இறந்தவர்களாய் இருந்தபோதும், நம்மை கிறிஸ்துவுடன் உயிர்ப்பித்தார். இறைவனுடைய கிருபையினாலேயே நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். 6இறைவன் கிறிஸ்துவுடனேகூட நம்மை உயிருடன் எழுப்பி, கிறிஸ்து இயேசுவில் நம்மைத் தம்முடனே பரலோகத்தின் உயர்வான இடங்களில் அமரும்படி செய்தார். 7இனிவரும் காலங்களிலும், கிறிஸ்து இயேசுவில் நமக்குக் காட்டிய தயவின்மூலம், இறைவனுடைய கிருபையின் அளவற்ற நிறைவை காண்பிக்கும்படியாகவே இதைச் செய்தார். 8விசுவாசத்தின்மூலமாய், கிருபையினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். இந்த இரட்சிப்பு உங்களால் உண்டானதல்ல. இது இறைவனுடைய கொடையே ஆகும். 9இந்த இரட்சிப்பு நற்செயல்களினால் வந்தது அல்ல. ஆகையால் இதைக்குறித்து ஒருவரும் பெருமைப்பாராட்ட முடியாது. 10ஏனெனில், நாங்கள் கிறிஸ்து இயேசுவில் படைக்கப்பட்ட இறைவனின் வேலைப்பாடுகளாய் இருக்கிறோம். நல்ல செயல்களைச் செய்யும்படி, இறைவனால் முன்னதாகவே ஆயத்தம் பண்ணப்பட்டபடியே நம்மை ஏற்பாடு செய்திருக்கிறார்.
யூதரும் யூதரல்லாதவரும் கிறிஸ்துவினால் இணைக்கப்படுதல்
11ஆகையால், “விருத்தசேதனம் செய்துகொண்டிருக்கிறோம்” என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள், பிறப்பினால் யூதரல்லாதவர்களாய் இருந்த உங்களை, “விருத்தசேதனம் பெறாதவர்கள்” என்று உங்களை அழைத்தார்கள் என்பதை நீங்கள் நினைவில்கொள்ளுங்கள். இந்த விருத்தசேதனம், மனிதரின் கைகளால் உடலில் செய்யப்பட்டது. 12அக்காலத்தில் நீங்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தீர்கள் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் கிறிஸ்துவிலிருந்து புறம்பானவர்களாய், இறைவனின் சுதந்தரமாகிய இஸ்ரயேலுக்கு உட்படாதவர்களாகவும், வாக்குக்கொடுக்கப்பட்ட உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களை அறியாதவர்களாகவும் இருந்தீர்கள். நீங்கள் எதிர்பார்ப்பு இல்லாதவர்களாகவும், இறைவன் இல்லாதவர்களாகவுமே இந்த உலகத்தில் வாழ்ந்தீர்கள். 13ஆனால் முன்பு ஒருகாலத்தில் தூரமாய் இருந்த நீங்கள், இப்பொழுதோ கிறிஸ்து இயேசுவில், கிறிஸ்துவின் இரத்தத்தினாலே இறைவனுக்கு சமீபமாயிருக்கிறீர்கள்.
14கிறிஸ்துவே நமது சமாதானத்தின் வழியானார். அவரே இருபிரிவினரையும் ஒன்றாக்கி, தடையாயிருந்த பகைமைச் சுவரை தமது உடலின் மூலமாக அழித்தார். 15கிறிஸ்து தமது உடலினால் மோசேயின் சட்டத்தை, அதின் கட்டளைகளோடும் விதிமுறைகளோடும் நீக்கியதினால், இந்த இருபிரிவினரையும் தம்மில் ஒரு புதிய மனிதனாக உருவாக்கி, சமாதானத்தை ஏற்படுத்தினார். 16சிலுவையினால் இருபிரிவினரையும் ஒரே உடலாக இறைவனுடன் ஒப்புரவாக்குவதே அவருடைய நோக்கமாயிருந்தது. கிறிஸ்து தமது சிலுவையினால் அவர்களது பகைமையைச் சாகடித்தார். 17இவ்விதமாய் அவர் தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாய் இருந்த அவர்களுக்கும் நற்செய்தியின் சமாதானத்தைப் பிரசங்கித்தார். 18ஆகவே கிறிஸ்து மூலமாக நாங்கள் இரு பிரிவினரும் ஒரே ஆவியானவரினால் பிதாவின் முன்னிலையில் வரக்கூடியவர்களாய் இருக்கிறோம்.
19ஆகையால் யூதரல்லாதவர்களாகிய நீங்கள் இனிமேலும் அந்நியரும் அறியாதவரும் அல்ல, இப்பொழுது நீங்களும் இறைவனுடைய மக்களுடன் குடியுரிமை பெற்றவர்களாயும், இறைவனுடைய குடும்பத்தின் அங்கத்தினர்களாயும் இருக்கிறீர்கள். 20நீங்களும் அப்போஸ்தலர், இறைவாக்கினர் ஆகியோரை அஸ்திபாரமாயும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாயும் கொண்டு கட்டப்பட்டிருக்கிறீர்கள். 21கிறிஸ்துவிலேயே அந்த முழுக்கட்டிடமும் ஒன்றாய் இணைக்கப்பட்டு, கர்த்தரில் ஒரு பரிசுத்த ஆலயமாக இருக்கும்படி வளர்ச்சி பெறுகிறது. 22நீங்களும்கூட கிறிஸ்துவில், இறைவன் தமது ஆவியானவரினால் குடியிருக்கும் இடமாக சேர்த்துக் கட்டப்படுகிறீர்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எபேசியர் 2: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்