யாத்திராகமம் 23:1-13

யாத்திராகமம் 23:1-13 TCV

“பொய் வதந்திகளைப் பரப்பவேண்டாம். தீயநோக்கமுள்ள சாட்சியாய் இருந்து கொடியவனுக்கு உதவவேண்டாம். “பிழையானதைச் செய்யும் மக்கள் கூட்டத்தைப் பின்பற்றவேண்டாம். ஒரு வழக்கில் நீங்கள் சாட்சி கொடுக்கும்போது, அதிகமான மக்களுக்கு சார்பாக இருந்து நீதியைப் புரட்டவேண்டாம். ஒரு ஏழையின் வழக்கிலே அவனுக்கு பட்சபாதம் காட்டவேண்டாம். “உங்கள் பகைவனுடைய மாட்டையோ அல்லது கழுதையையோ வழிதப்பி திரிகிறதை நீங்கள் காணநேரிட்டால், அதைத் திரும்பவும் அவனிடம் கொண்டுபோய்விடத் தவறவேண்டாம். உங்களை வெறுக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டால், அதை அங்கேயே விட்டுவிட்டுப் போகவேண்டாம். அவனுக்கு உதவிசெய்யவும் தவறவேண்டாம். “உங்களிடத்தில் இருக்கும் ஏழை மக்களுக்கு அவர்களுடைய வழக்கில் நீதிவழங்க மறுக்கவேண்டாம். பொய்க்குற்றச்சாட்டுடன் சம்பந்தப்படவேண்டாம். குற்றமற்றவனையும், உண்மையுள்ளவனையும் கொலைசெய்ய வேண்டாம். ஏனெனில் நான் குற்றவாளியைத் தண்டியாமல் விடமாட்டேன். “இலஞ்சம் வாங்கவேண்டாம், இலஞ்சம் பார்வையுள்ளவர்களைக் குருடராக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டுகிறது. “பிறநாட்டினனை ஒடுக்கவேண்டாம்; பிறநாட்டினராய் இருப்பது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமே. ஏனெனில், நீங்களும் எகிப்தில் பிறநாட்டினராய் இருந்தீர்களே. “நீங்கள் ஆறு வருடங்களுக்கு உங்கள் வயல்களை விதைத்து விளைச்சலை அறுவடை செய்யவேண்டும். ஆனால் ஏழாவது வருடமோ, நிலமானது உழப்படாமலும் பயன்படுத்தப்படாமலும் விட்டுவிட வேண்டும். உங்கள் மத்தியிலுள்ள ஏழைகள் அதிலிருந்து வளரும் தானியங்களை உணவாகப் பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் விட்டதைக் காட்டு மிருகங்கள் தின்னலாம். உங்கள் திராட்சைத் தோட்டத்திற்கும், ஒலிவத்தோப்பிற்கும் அப்படியே செய்யுங்கள். “நீங்கள் ஆறு நாட்களுக்கு உங்கள் வேலையைச் செய்யுங்கள். ஏழாம்நாளோ வேலைசெய்யவேண்டாம். அதனால் உங்கள் எருதும், கழுதையும் இளைப்பாறட்டும். பிறநாட்டினனும் உங்கள் வீட்டில் பிறந்த அடிமையும் இளைப்பாறி, புதுபெலன் பெறட்டும். “நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் செய்யக் கவனமாயிருங்கள். பிற நாட்டு தெய்வங்களின் பெயரைச்சொல்லிக் கூப்பிடவேண்டாம். அவற்றின் பெயரை உங்கள் உதடுகளினால் உச்சரிக்கவும் வேண்டாம்.