யாத்திராகமம் 7:1-13

யாத்திராகமம் 7:1-13 TCV

அப்பொழுது யெகோவா மோசேயிடம், “பார், நான் உன்னைப் பார்வோனுக்கு இறைவனைப்போல் ஆக்கியிருக்கிறேன், உன் சகோதரன் ஆரோன் உன் இறைவாக்கினனாக இருப்பான். நான் உனக்குக் கட்டளையிடும் யாவற்றையும் நீ சொல்லவேண்டும், உன் சகோதரன் ஆரோன் பார்வோனிடம் இஸ்ரயேலரை அவனுடைய நாட்டிலிருந்து வெளியே போகவிடும்படிச் சொல்லவேண்டும். ஆனாலும் நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துவேன், எகிப்தில் என் அற்புத அடையாளங்களையும் அதிசயங்களையும் அதிகமாக்கினாலும், பார்வோன் உனக்குச் செவிகொடுக்கமாட்டான். அப்பொழுது நான் எகிப்தின்மேல் என் கரத்தை வைத்து, தண்டனைத் தீர்ப்பளிக்கும் வல்ல செயல்களால், என் மக்களாகிய இஸ்ரயேலரை வெளியே கொண்டுவருவேன்; அவர்களைக் கோத்திரப் பிரிவுகளாக கொண்டுவருவேன். நான் எகிப்தின்மேல் என் கையை நீட்டி இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவரும்போது, நானே யெகோவா என்று எகிப்தியர் அறிந்துகொள்வார்கள்.” மோசேயும் ஆரோனும் யெகோவா தமக்குக் கட்டளையிட்டதையே செய்தார்கள். அவர்கள் பார்வோனிடம் பேசின நாட்களில், மோசே 80 வயதுடையவனாகவும், ஆரோன் 83 வயதுடையவனாகவும் இருந்தார்கள். யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியதாவது, “பார்வோன் உங்களிடம் ஒரு அற்புதத்தைக் கேட்பான். அப்பொழுது நீ ஆரோனிடம், ‘உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகக் கீழே எறிந்துவிடு’ என்று சொல், அது பாம்பாக மாறும்” என்றார். அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய் யெகோவாவின் கட்டளைப்படி செய்தார்கள். பார்வோனுக்கும் அவன் அதிகாரிகளுக்கும் முன்பாக ஆரோன் தன் கோலைக் கீழே எறிந்தபோது, அது பாம்பாக மாறியது. அப்பொழுது பார்வோன், ஞானிகளையும் சூனியக்காரரையும் அழைத்தான். எகிப்திய மந்திரவாதிகளாகிய அவர்களும் தங்கள் மாயவித்தைகளினால் அவ்வாறே செய்தார்கள்: அவர்கள் ஒவ்வொருவரும் தன்தன் கோலைக் கீழே போட்டபோது அவை பாம்பாக மாறின. ஆனால் ஆரோனின் கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிவிட்டது. ஆனாலும், யெகோவா சொல்லியிருந்தபடியே, பார்வோனுடைய இருதயம் கடினமாகியது; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.