எஸ்றா 1:1-6

எஸ்றா 1:1-6 TCV

பெர்சிய அரசன் கோரேஸின் முதலாம் வருடத்தில், எரேமியாவின் மூலம் யெகோவா பேசிய வார்த்தை நிறைவேறும்படி பெர்சிய அரசனின் இருதயத்தை யெகோவா ஏவினார். அதன்படி அவன் தனது ஆட்சிக்குட்பட்ட பிரதேசம் எங்கும் ஒரு அறிவித்தலைக் கொடுத்து, அதை எழுதிவைத்தான். “பெர்சிய அரசன் கோரேஸ் சொல்வது இதுவே: “ ‘பரலோகத்தின் இறைவனாகிய யெகோவா பூமியின் அரசுகளையெல்லாம் எனக்குக் கொடுத்து, யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்கென ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு என்னை நியமித்திருக்கிறார். அவருடைய மக்களில் யார் உங்களோடிருக்கிறானோ அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்கு போகட்டும். அவன் போய் எருசலேமில் இருக்கும் இறைவனும் இஸ்ரயேலின் இறைவனுமான யெகோவாவின் ஆலயத்தைக் கட்டட்டும். அவனுடைய இறைவனாகிய யெகோவா அவனுடன் இருப்பாராக. அப்பொழுது இறைவனுடைய மக்கள் எந்த இடங்களில் வாழ்ந்தாலும், அவர்களுக்கு அவ்விடத்திலுள்ள மக்கள் உதவிசெய்ய வேண்டும். இவ்வாறு எருசலேமில் இருக்கிற இறைவனின் ஆலயத்திற்கென வெள்ளி, தங்கம், மற்றும் தேவையான பொருட்கள், வளர்ப்பு மிருகங்களுடன் தேவையான சுயவிருப்புக் காணிக்கையையும் கொடுக்கவேண்டும்.’ ” அப்படியே இறைவனால் தங்கள் இருதயத்தில் ஏவப்பட்ட யூதா, பென்யமீன் குடும்பத்தலைவர்களும், ஆசாரியரும், லேவியர்களும் எருசலேமுக்குச் சென்று, யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக்கட்ட ஆயத்தம் பண்ணினார்கள். அவர்களுடைய அயலவர்கள் எல்லோரும் வெள்ளியினாலும் தங்கத்தினாலுமான பொருட்கள், வேறு பொருட்கள், வளர்ப்பு மிருகங்கள், இன்னும் விலையுயர்ந்த அன்பளிப்புகள் ஆகியவற்றைக் கொடுத்து உதவினார்கள். அத்துடன் தங்கள் சுயவிருப்பக் காணிக்கைகளையும் கொடுத்தார்கள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த எஸ்றா 1:1-6