ஆதியாகமம் 11

11
பாபேல் கோபுரம்
1அக்காலத்தில் முழு உலகமும் ஒரே மொழியையும், பொதுவான ஒரே பேச்சு வழக்கையும் உடையதாய் இருந்தது. 2மக்கள் கிழக்குநோக்கி இடம்பெயர்ந்து சென்றபோது, சிநெயார் நாட்டிலே ஒரு சமவெளியைக் கண்டு, அங்கே குடியேறினார்கள்.
3அங்கே அவர்கள், “நாம் செங்கல் செய்து, அவற்றை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். அவர்கள் கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லையும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலையும் உபயோகித்தார்கள். 4பின்னும் அவர்கள், “வாருங்கள், நாம் வானத்தைத் தொடும்படியான கோபுரத்தைக் கொண்ட ஒரு பட்டணத்தைக் கட்டுவோம்; அதனால் நமக்குப் புகழ் உண்டாகும்படி செய்து, நாம் பூமியெங்கிலும் சிதறிப் போகாமல் இருப்போம்” என்றும் சொல்லிக்கொண்டார்கள்.
5மனிதர் கட்டிக்கொண்டிருந்த நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்க, யெகோவா இறங்கி வந்தார். 6யெகோவா, “அவர்கள் ஒரே மொழி பேசும் ஒரே மக்களாய் இருப்பதால் இதைச் செய்யத்தொடங்கி இருக்கிறார்கள்; ஆகவே அவர்கள் திட்டமிடும் எதையும் அவர்களால் செய்யமுடியாமல் போகாது. 7ஆதலால் நாம் அங்கே இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றவர் விளங்கிக்கொள்ளாதபடி, அவர்களுடைய மொழியைக் குழப்பிவிடுவோம் வாருங்கள்” என்றார்.
8அப்படியே யெகோவா அவர்களை அங்கிருந்து பூமியெங்கும் சிதறப்பண்ணி, அவர்கள் பட்டணத்தைக் கட்டுவதை நிறுத்தினார். 9முழு உலகத்தினுடைய மொழியையும் யெகோவா குழப்பினபடியால், அந்த இடம் பாபேல் என்று அழைக்கப்பட்டது. யெகோவா அங்கிருந்து அவர்களைப் பூமியெங்கும் சிதறப்பண்ணினார்.
சேமிலிருந்து ஆபிராம்வரை
10சேமின் வம்சவரலாறு இதுவே:
பெருவெள்ளம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் சென்றபின், சேம் 100 வயதாய் இருக்கும்போது, அர்பக்சாத்தைப் பெற்றான். 11அர்பக்சாத் பிறந்த பிறகு, சேம் 500 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
12அர்பக்சாத் 35 வயதாய் இருக்கும்போது, சேலாவைப் பெற்றான். 13சேலா பிறந்த பிறகு அர்பக்சாத் 403 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
14சேலா 30 வயதாய் இருக்கும்போது, ஏபேரைப் பெற்றான். 15ஏபேர் பிறந்த பிறகு, சேலா 403 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
16ஏபேர் 34 வயதாய் இருக்கும்போது, பேலேகைப் பெற்றான். 17பேலேகு பிறந்த பிறகு, ஏபேர் 430 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
18பேலேகு 30 வயதாய் இருக்கும்போது ரெகூவைப் பெற்றான். 19ரெகூ பிறந்த பிறகு, பேலேகு 209 வருடங்கள் வாழ்ந்து இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
20ரெகூ 32 வயதாய் இருக்கும்போது செரூகுவைப் பெற்றான். 21செரூகு பிறந்த பிறகு ரெகூ 207 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
22செரூகு 30 வயதாய் இருக்கும்போது நாகோரைப் பெற்றான். 23நாகோர் பிறந்த பிறகு செரூகு 200 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
24நாகோர் 29 வயதாய் இருக்கும்போது தேராகுவைப் பெற்றான். 25தேராகு பிறந்த பிறகு நாகோர் 119 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
26தேராகு 70 வயதாய் இருக்கும்போது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.
ஆபிராமின் குடும்பம்
27தேராகின் வம்சவரலாறு இதுவே:
ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோருக்குத் தேராகு தகப்பனானான். ஆரான் லோத்துக்குத் தகப்பனானான். 28தன் தகப்பன் தேராகு உயிரோடிருக்கும்போதே, ஆரான் தனது பிறப்பிடமான கல்தேயர் நாட்டிலுள்ள ஊர் என்னும் இடத்தில் இறந்தான். 29ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்தார்கள். ஆபிராமின் மனைவி சாராய், நாகோரின் மனைவி மில்க்காள்; மில்க்காள் ஆரானின் மகள், ஆரான் மில்க்காள், இஸ்காள் ஆகிய இருவரின் தகப்பன். 30சாராய் குழந்தை இல்லாமல் மலடியாய் இருந்தாள், ஏனெனில் அவளுக்குப் பிள்ளைகள் இல்லை.
31தேராகு, தன் மகன் ஆபிராமையும், ஆரானின் மகனான தன் பேரன் லோத்தையும், ஆபிராமின் மனைவியான தன் மருமகள் சாராயையும், அழைத்துக்கொண்டு கல்தேயரின் நாட்டிலுள்ள ஊர் என்னும் பட்டணத்தைவிட்டு, கானான் நாட்டுக்குப் போகப் புறப்பட்டான். ஆனால் அவர்கள் ஆரான் என்னும் இடத்திற்கு வந்தபோது, அங்கேயே குடியிருந்துவிட்டார்கள்.
32தேராகு 205 வருடங்கள் வாழ்ந்தபின் ஆரானிலே இறந்தான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ஆதியாகமம் 11: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்