ஏசாயா 2:1-4

ஏசாயா 2:1-4 TCV

ஆமோஸின் மகன் ஏசாயா, யூதா நாட்டையும், எருசலேம் பட்டணத்தையும் பற்றிக் கண்ட தரிசனம். கடைசி நாட்களிலே, யெகோவாவினுடைய ஆலயத்தின் மலை, எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாக நிலைநிறுத்தப்படும்; எல்லா குன்றுகளுக்கு மேலாக உயர்த்தப்படும், எல்லா தேசத்தார்களும் அதை நாடி ஓடி வருவார்கள். அநேக மக்கள் கூட்டங்கள் வந்து, “வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்கு ஏறிப்போவோம், யாக்கோபின் இறைவனுடைய ஆலயத்திற்குப் போவோம். நாம் அவர் பாதைகளில் நடப்பதற்கு அவர் தம் வழிகளை நமக்கு போதிப்பார்” என்பார்கள். சீயோனிலிருந்து அவரது சட்டமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் வெளிவரும். அவர் நாடுளுக்கிடையில் நியாயம் விசாரித்து, அநேக மக்கள் கூட்டங்களின் வழக்குகளைத் தீர்த்துவைப்பார். அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடித்துச் செய்துகொள்வார்கள். அதன்பின் ஒரு நாடு வேறு நாட்டை எதிர்த்து பட்டயத்தை எடுப்பதுமில்லை, போருக்கான பயிற்சியையும் அவர்கள் கற்பதுமில்லை.