யோவான் 1:35-42

யோவான் 1:35-42 TCV

மறுநாளிலே மீண்டும் யோவான் தன்னுடைய சீடர்களில் இரண்டு பேருடன் அங்கு நின்றுகொண்டிருந்தான். இயேசு அவ்வழியாய் கடந்துபோகிறதை அவன் கண்டு, “இதோ பாருங்கள், இறைவனுடைய ஆட்டுக்குட்டி!” என்றான். அந்த இரண்டு சீடர்களும் அவன் இப்படிச் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்கள். இயேசு திரும்பிப்பார்த்து, அவர்கள் தம்மைப் பின்பற்றி வருகிறதைக் கண்டு, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், “போதகரே, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பதிலாக, “வந்து, நீங்களே பாருங்கள்” என்றார். எனவே அவர்கள் அவருடன் போய், இயேசு தங்கும் இடத்தைக் கண்டு, அந்த நாளை அவருடன் கழித்தார்கள். அப்பொழுது நேரம் பிற்பகல் நான்கு மணியாயிருந்தது. யோவான் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்ற அந்த இருவரில் ஒருவனின் பெயர் அந்திரேயா; இவன் சீமோன் பேதுருவின் சகோதரன். அந்திரேயா போய், முதலில் தன் சகோதரன் சீமோனைக் கண்டு அவனிடம், “நாங்கள் மேசியாவைக் கண்டோம்” என்று சொன்னான். மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம். அவன் சீமோனை இயேசுவினிடத்திற்குக் கூட்டிக்கொண்டு வந்தான். இயேசு சீமோனைப் பார்த்து, “யோவானின் மகனாகிய சீமோனே, நீ கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். கேபா என்றால் கற்பாறை என்று பொருள்படும். அது கிரேக்க மொழியிலே பேதுரு எனப்படும்.