பண்டிகையிலே ஆராதிப்பதற்காகப் போனவர்களிடையே சில கிரேக்கர்கள் இருந்தார்கள். அவர்கள் பிலிப்புவினிடத்தில் வந்து, “ஐயா, நாங்கள் இயேசுவைப் பார்க்க விரும்புகிறோம்” என்றார்கள். இந்த பிலிப்பு கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்தவன். பிலிப்பு போய் அந்திரேயாவுக்கு அதைச் சொன்னான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் போய் இயேசுவினிடத்தில் அதைப்பற்றி சொன்னார்கள்.
அப்பொழுது இயேசு, “மானிடமகன் மகிமைப்படுவதற்கான வேளை வந்துவிட்டது. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்கிறேன், ஒரு கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாகாவிட்டால், அது ஒரு தனித்த விதையாகவே இருக்கும். ஆனால் அது செத்தாலோ, அநேக விதைகளை விளையச் செய்யும். தமது வாழ்வை நேசிக்கிறவர்கள், அதை இழந்துபோவார்கள். ஆனால் இந்த உலகத்திலே தமது வாழ்வை வெறுக்கிறவர்களோ, நித்திய வாழ்வுக்கென அதைக் காத்துக்கொள்வார்கள். எனக்கு ஊழியம் செய்கிறவர்கள் யாரோ அவர்கள் என்னைப் பின்பற்றவேண்டும். நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என்னுடைய ஊழியக்காரர்களும் இருப்பார்கள். எனக்கு ஊழியம் செய்கிறவர்களை என் பிதா கனம்பண்ணுவார்.
“இப்பொழுது என் உள்ளம் கலங்குகிறது. நான் என்ன சொல்வேன்? ‘பிதாவே, இந்தத் துன்ப வேளையிலிருந்து என்னை காத்துக்கொள்ளும்’ என்று சொல்வேனோ? இல்லையே, இந்தக் காரணத்திற்காகத்தானே நான் வந்தேன்; இதற்காகவே நான் இந்த வேளைக்குள் வந்தேன். ‘பிதாவே உம்முடைய பெயரை மகிமைப்படுத்தும்!’ ” என்றார்.
அப்பொழுது, “நான் அதை மகிமைப்படுத்தியிருக்கிறேன். அதைத் திரும்பவும் மகிமைப்படுத்துவேன்” என்று பரலோகத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. அங்கு கூடியிருந்து அதைக்கேட்ட மக்கள், “வானத்தில் முழக்கம் உண்டாகியது” என்றார்கள். வேறுசிலரோ, “ஒரு இறைத்தூதன் இயேசுவுடனே பேசினான்” என்றார்கள்.
இயேசுவோ, “இந்தக் குரல் உங்களுக்காகத் தொனித்ததே ஒழிய, எனக்காக அல்ல. இதுவே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு ஏற்படும் வேளையாக இருக்கிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி வெளியே துரத்தப்படுவான். ஆனால் நானோ, இந்தப் பூமியிலிருந்து உயர்த்தப்படும்போது, எல்லாரையும் என்னிடமாய் கவர்ந்துகொள்வேன்” என்றார். எவ்விதமான மரணம் அவருக்கு ஏற்படப்போகிறது என்பதைக் காண்பிப்பதற்காகவே அவர் இதைச் சொன்னார்.
அப்பொழுது அங்கு கூடியிருந்த மக்கள், “கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று சட்டத்திலிருந்து நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்க மானிடமகன் உயர்த்தப்பட வேண்டும் என்று நீர் எப்படிச் சொல்லலாம்? யார் அந்த மானிடமகன்?” என்றார்கள்.
அப்பொழுது இயேசு அவர்களிடம், “இன்னும் சிறிது காலத்திற்கே வெளிச்சம் உங்களோடு இருக்கப்போகிறது. இருள் உங்களை மூடிக்கொள்ளும் முன்னதாக, வெளிச்சம் உங்களுடன் இருக்கும்போதே, நீங்கள் அதில் நடந்துகொள்ளுங்கள். இருளிலே நடக்கிறவன், தான் எங்கே போகிறான் என்று அறியாதிருக்கிறான். வெளிச்சம் உங்களிடம் இருக்கும்போதே, அந்த வெளிச்சத்தை விசுவாசியுங்கள். அப்பொழுது நீங்கள் வெளிச்சத்திற்குரிய மகன்களாயிருப்பீர்கள்” என்றார். இயேசு இதைச் சொன்னபின்பு அவர்களைவிட்டுப் புறப்பட்டு மறைவாக சென்றுவிட்டார்.
இயேசு இத்தனை அடையாளங்களை எல்லாம் யூதர்களுக்கு முன்பாக செய்த போதிலும், அவர்களில் பலர் அவரில் விசுவாசம் வைக்காமலேயே இருந்தார்கள். இறைவாக்கினன் ஏசாயாவின் மூலம் கூறப்பட்ட வார்த்தை நிறைவேறும்படியாகவே இது நடந்தது:
“ஆண்டவரே, எங்களுடைய செய்தியை விசுவாசித்தவன் யார்?
கர்த்தருடைய கரம் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?”
என்று அவன் கூறியிருக்கிறான்.
இந்தக் காரணத்தினாலேயே அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. ஏனெனில் ஏசாயா வேறொரு இடத்தில் சொல்லியிருப்பதாவது:
“கர்த்தர் அவர்களுடைய கண்களைக் குருடாக்கிவிட்டார்.
அவர்களுடைய இருதயத்தையோ கடினப்படுத்திவிட்டார்.
இதனாலேயே அவர்கள் தங்களுடைய கண்களால் காணாமலும்,
தங்கள் இருதயங்களினால் உணராமலும் இருக்கிறார்கள்.
நான் அவர்களை குணமாக்கும்படி,
அவர்களால் என்னிடம் மனந்திரும்பி வரமுடியவும் இல்லை.”
ஏசாயா கர்த்தரின் மகிமையைக் கண்டு அவரைக்குறித்துப் பேசியபோதே இதைச் சொன்னான்.
ஆனால் அதிகாரிகளில் பலர், அவரில் விசுவாசம் வைத்தார்கள். ஆனாலும் பரிசேயர்களின் நிமித்தம் அவர்கள் தங்கள் விசுவாசத்தைக்குறித்து வெளிப்படையாய் பேசவில்லை. அப்படிப் பேசினால் யூதருடைய ஜெப ஆலயத்திலிருந்து தாங்கள் வெளியேற்றப்படலாம் என்று அவர்கள் பயந்தார்கள். ஏனெனில் இறைவனிடமிருந்து வரும் புகழ்ச்சியைவிட, மனிதரிடமிருந்து வந்த புகழ்ச்சியை அவர்கள் விரும்பினார்கள்.
அப்பொழுது இயேசு உரத்த குரலில் சொன்னதாவது: “யாராவது என்னில் விசுவாசம் வைக்கும்போது, அவர்கள் என்னிடத்தில் மாத்திரம் அல்ல என்னை அனுப்பியவரிலும் விசுவாசம் வைக்கிறார்கள். அவர்கள் என்னை நோக்கிப் பார்க்கும்போது, என்னை அனுப்பியவரை அவர்கள் காண்கிறார்கள். என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவர்கள் தொடர்ந்து இருளில் இராதபடிக்கே, நான் இந்த உலகத்திற்கு வெளிச்சமாய் வந்திருக்கிறேன்.
“என்னுடைய வார்த்தையைக் கேட்டும் அதைக் கைக்கொள்ளாதவனையோ, நான் இப்போது நியாயந்தீர்ப்பதில்லை. ஏனெனில் உலகத்தை நியாயந்தீர்க்க நான் வரவில்லை. அதை இரட்சிக்கவே நான் வந்தேன். என்னைப் புறக்கணித்து என் வார்த்தையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு ஒரு நீதிபதி உண்டு; அது நான் பேசிய இந்த வார்த்தையே ஆகும். அது கடைசி நாளில் அவர்களை நியாயந்தீர்க்கும். ஏனெனில் நான் என்னுடைய சுயவிருப்பத்தின்படி பேசவில்லை. என்னை அனுப்பிய பிதாவே நான் என்ன சொல்லவேண்டும் என்றும், அதை எப்படிச் சொல்லவேண்டும் என்றும் எனக்குக் கட்டளையிட்டார். அவருடைய கட்டளை நித்திய வாழ்வுக்கு வழிநடத்துகிறது என்று எனக்குத் தெரியும். எனவே பிதா எனக்குச் சொல்லும்படி சொன்னதையே நான் சொல்கிறேன்” என்றார்.