12
இயேசுவின் பாதத்தில் நறுமணத்தைலம் ஊற்றுதல்
1பஸ்கா என்ற பண்டிகைக்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். இங்குதான் இயேசு மரித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பிய லாசரு வாழ்ந்தான். 2அங்கே அவர்கள் இயேசுவுக்கு ஒரு விருந்து கொடுத்தார்கள். மார்த்தாள் உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். லாசருவோ இயேசுவுடனே சாப்பாட்டுப் பந்தியில் உள்ளவர்களில் ஒருவனாக இருந்தான். 3அப்பொழுது மரியாள், மிகவும் விலை உயர்ந்த நளதம் என்னும் நறுமணத் தைலத்தில் அரை லிட்டர்#12:3 மூல மொழியில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை அவள் இயேசுவின் பாதங்களில் ஊற்றி, அவருடைய பாதங்களைத் தனது கூந்தலால் துடைத்தாள். அந்த நறுமணத் தைலத்தின் வாசனை வீட்டை நிரப்பியது.
4ஆனால் இயேசுவின் சீடர்களில் ஒருவனான யூதாஸ் ஸ்காரியோத்து இதை எதிர்த்தான். இவனே பின்னர் இயேசுவைக் காட்டிக்கொடுத்தவன். 5அவன், “இந்த நறுமணத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு#12:5 என்பது மூல பாஷையில் மூன்று தினாரி விற்று, அந்தப் பணத்தை ஏன் ஏழைகளுக்குக் கொடுக்கவில்லை? அதன் மதிப்பு ஒரு வருட சம்பளமாய் இருக்கிறதே!” என்றான். 6யூதாஸ் ஏழைகளைக் குறித்து அக்கறையுடையவனாய் இருந்ததினால் இதைச் சொல்லவில்லை; திருடனாயிருந்தபடியாலேயே இப்படிச் சொன்னான். பணப்பைக்குப் பொறுப்பாய் இருந்த அவன், அதில் போடப்படும் பணத்திலிருந்து தனக்காக எடுத்துக்கொள்வதுண்டு.
7ஆனால் இயேசுவோ, “மரியாளை விட்டுவிடுங்கள். என்னை அடக்கம்பண்ணும் நாளுக்கென்றே இவள் இந்தத் தைலத்தை வைத்திருந்தாள். 8ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள்,#12:8 உபா. 15:11 ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன்” என்றார்.
9இதற்கிடையில் இயேசு அங்கே இருக்கிறார் என்று யூதர்கள் அறிந்து, ஒரு பெருங்கூட்டமாய் அங்கே வந்தார்கள். அவர்கள் இயேசுவைப் பார்ப்பதற்காக மாத்திரமல்ல, மரித்ததோரில் இருந்து உயிருடன் அவர் எழுப்பிய லாசருவையும் பார்ப்பதற்கு வந்தார்கள். 10எனவே தலைமை ஆசாரியர்கள் லாசருவையும் கொல்வதற்குத் திட்டம் வகுத்தார்கள். 11ஏனெனில் லாசருவின் நிமித்தம் யூதர்களில் பலர் இயேசுவினிடத்தில் போய் அவரில் விசுவாசம் வைத்தார்கள்.
இயேசுவின் ஊர்வலம்
12மறுநாள் பண்டிகைக்காக வந்திருந்த பெருந்திரளான மக்கள் இயேசு எருசலேமுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டார்கள். 13அவர்கள் குருத்தோலைகளை எடுத்துக்கொண்டு அவரைச் சந்திக்கப் புறப்பட்டார்கள். அவர்கள்,
“ஓசன்னா!#12:13 சங். 118:25,26”
“கர்த்தருடைய பெயரால் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!”
“இஸ்ரயேலின் அரசர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!”
என்று ஆர்ப்பரித்தார்கள்.
14இயேசு ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு அதன்மேல் உட்கார்ந்தார். ஏனெனில் அவரைக்குறித்து எழுதப்பட்டிருக்கிறதாவது:
15“சீயோன் மகளே, பயப்படாதே;
இதோ உன்னுடைய அரசர்
கழுதைக் குட்டியின்மேல் வருகிறார்.”#12:15 சக. 9:9
16ஆரம்பத்திலே அவருடைய சீடர்கள் இதையெல்லாம் விளங்கிக்கொள்ளவில்லை. இயேசு மகிமைப்பட்ட பின்பே, இவை எல்லாம் அவரைக்குறித்து இறைவாக்கினரால் எழுதப்பட்டிருந்தன என்றும், இவற்றை மக்கள் அவருக்கு அப்படியே செய்தார்கள் என்றும் உணர்ந்துகொண்டார்கள்.
17இயேசு லாசருவைக் கல்லறையிலிருந்து கூப்பிட்டு, அவனை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினபோது, அவருடன் இருந்த மக்கள் கூட்டம் தொடர்ந்து இந்தச் செய்தியைப் பரப்பினார்கள். 18அநேக மக்கள் இயேசு இப்படிப்பட்ட ஒரு அடையாளத்தைச் செய்தார் என்று கேள்விப்பட்டதினால், அவரைச் சந்திப்பதற்குச் சென்றார்கள். 19அப்பொழுது பரிசேயர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “நம்மால் ஒன்றுமே செய்யமுடியாமல் இருக்கிறதே. பாருங்கள்! முழு உலகமும் அவருக்குப் பின்னால் எப்படிப்போகிறது” என்றார்கள்.
இயேசு தன்னுடைய மரணத்தை முன்னறிவித்தல்
20பண்டிகையிலே ஆராதிப்பதற்காகப் போனவர்களிடையே சில கிரேக்கர்கள் இருந்தார்கள். 21அவர்கள் பிலிப்புவினிடத்தில் வந்து, “ஐயா, நாங்கள் இயேசுவைப் பார்க்க விரும்புகிறோம்” என்றார்கள். இந்த பிலிப்பு கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்தவன். 22பிலிப்பு போய் அந்திரேயாவுக்கு அதைச் சொன்னான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் போய் இயேசுவினிடத்தில் அதைப்பற்றி சொன்னார்கள்.
23அப்பொழுது இயேசு, “மானிடமகன் மகிமைப்படுவதற்கான வேளை வந்துவிட்டது. 24மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்கிறேன், ஒரு கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாகாவிட்டால், அது ஒரு தனித்த விதையாகவே இருக்கும். ஆனால் அது செத்தாலோ, அநேக விதைகளை விளையச் செய்யும். 25தமது வாழ்வை நேசிக்கிறவர்கள், அதை இழந்துபோவார்கள். ஆனால் இந்த உலகத்திலே தமது வாழ்வை வெறுக்கிறவர்களோ, நித்திய வாழ்வுக்கென அதைக் காத்துக்கொள்வார்கள். 26எனக்கு ஊழியம் செய்கிறவர்கள் யாரோ அவர்கள் என்னைப் பின்பற்றவேண்டும். நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என்னுடைய ஊழியக்காரர்களும் இருப்பார்கள். எனக்கு ஊழியம் செய்கிறவர்களை என் பிதா கனம்பண்ணுவார்.
27“இப்பொழுது என் உள்ளம் கலங்குகிறது. நான் என்ன சொல்வேன்? ‘பிதாவே, இந்தத் துன்ப வேளையிலிருந்து என்னை காத்துக்கொள்ளும்’ என்று சொல்வேனோ? இல்லையே, இந்தக் காரணத்திற்காகத்தானே நான் வந்தேன்; இதற்காகவே நான் இந்த வேளைக்குள் வந்தேன். 28‘பிதாவே உம்முடைய பெயரை மகிமைப்படுத்தும்!’ ” என்றார்.
அப்பொழுது, “நான் அதை மகிமைப்படுத்தியிருக்கிறேன். அதைத் திரும்பவும் மகிமைப்படுத்துவேன்” என்று பரலோகத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. 29அங்கு கூடியிருந்து அதைக்கேட்ட மக்கள், “வானத்தில் முழக்கம் உண்டாகியது” என்றார்கள். வேறுசிலரோ, “ஒரு இறைத்தூதன் இயேசுவுடனே பேசினான்” என்றார்கள்.
30இயேசுவோ, “இந்தக் குரல் உங்களுக்காகத் தொனித்ததே ஒழிய, எனக்காக அல்ல. 31இதுவே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு ஏற்படும் வேளையாக இருக்கிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி வெளியே துரத்தப்படுவான். 32ஆனால் நானோ, இந்தப் பூமியிலிருந்து உயர்த்தப்படும்போது, எல்லாரையும் என்னிடமாய் கவர்ந்துகொள்வேன்” என்றார். 33எவ்விதமான மரணம் அவருக்கு ஏற்படப்போகிறது என்பதைக் காண்பிப்பதற்காகவே அவர் இதைச் சொன்னார்.
34அப்பொழுது அங்கு கூடியிருந்த மக்கள், “கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று சட்டத்திலிருந்து நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்க மானிடமகன் உயர்த்தப்பட வேண்டும் என்று நீர் எப்படிச் சொல்லலாம்? யார் அந்த மானிடமகன்?” என்றார்கள்.
35அப்பொழுது இயேசு அவர்களிடம், “இன்னும் சிறிது காலத்திற்கே வெளிச்சம் உங்களோடு இருக்கப்போகிறது. இருள் உங்களை மூடிக்கொள்ளும் முன்னதாக, வெளிச்சம் உங்களுடன் இருக்கும்போதே, நீங்கள் அதில் நடந்துகொள்ளுங்கள். இருளிலே நடக்கிறவன், தான் எங்கே போகிறான் என்று அறியாதிருக்கிறான். 36வெளிச்சம் உங்களிடம் இருக்கும்போதே, அந்த வெளிச்சத்தை விசுவாசியுங்கள். அப்பொழுது நீங்கள் வெளிச்சத்திற்குரிய மகன்களாயிருப்பீர்கள்” என்றார். இயேசு இதைச் சொன்னபின்பு அவர்களைவிட்டுப் புறப்பட்டு மறைவாக சென்றுவிட்டார்.
யூதர்களின் அவிசுவாசம்
37இயேசு இத்தனை அடையாளங்களை எல்லாம் யூதர்களுக்கு முன்பாக செய்த போதிலும், அவர்களில் பலர் அவரில் விசுவாசம் வைக்காமலேயே இருந்தார்கள். 38இறைவாக்கினன் ஏசாயாவின் மூலம் கூறப்பட்ட வார்த்தை நிறைவேறும்படியாகவே இது நடந்தது:
“ஆண்டவரே, எங்களுடைய செய்தியை விசுவாசித்தவன் யார்?
கர்த்தருடைய கரம் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?”#12:38 ஏசா. 53:1
என்று அவன் கூறியிருக்கிறான்.
39இந்தக் காரணத்தினாலேயே அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. ஏனெனில் ஏசாயா வேறொரு இடத்தில் சொல்லியிருப்பதாவது:
40“கர்த்தர் அவர்களுடைய கண்களைக் குருடாக்கிவிட்டார்.
அவர்களுடைய இருதயத்தையோ கடினப்படுத்திவிட்டார்.
இதனாலேயே அவர்கள் தங்களுடைய கண்களால் காணாமலும்,
தங்கள் இருதயங்களினால் உணராமலும் இருக்கிறார்கள்.
நான் அவர்களை குணமாக்கும்படி,
அவர்களால் என்னிடம் மனந்திரும்பி வரமுடியவும் இல்லை.”#12:40 ஏசா. 6:10
41ஏசாயா கர்த்தரின் மகிமையைக் கண்டு அவரைக்குறித்துப் பேசியபோதே இதைச் சொன்னான்.
42ஆனால் அதிகாரிகளில் பலர், அவரில் விசுவாசம் வைத்தார்கள். ஆனாலும் பரிசேயர்களின் நிமித்தம் அவர்கள் தங்கள் விசுவாசத்தைக்குறித்து வெளிப்படையாய் பேசவில்லை. அப்படிப் பேசினால் யூதருடைய ஜெப ஆலயத்திலிருந்து தாங்கள் வெளியேற்றப்படலாம் என்று அவர்கள் பயந்தார்கள். 43ஏனெனில் இறைவனிடமிருந்து வரும் புகழ்ச்சியைவிட, மனிதரிடமிருந்து வந்த புகழ்ச்சியை அவர்கள் விரும்பினார்கள்.
44அப்பொழுது இயேசு உரத்த குரலில் சொன்னதாவது: “யாராவது என்னில் விசுவாசம் வைக்கும்போது, அவர்கள் என்னிடத்தில் மாத்திரம் அல்ல என்னை அனுப்பியவரிலும் விசுவாசம் வைக்கிறார்கள். 45அவர்கள் என்னை நோக்கிப் பார்க்கும்போது, என்னை அனுப்பியவரை அவர்கள் காண்கிறார்கள். 46என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவர்கள் தொடர்ந்து இருளில் இராதபடிக்கே, நான் இந்த உலகத்திற்கு வெளிச்சமாய் வந்திருக்கிறேன்.
47“என்னுடைய வார்த்தையைக் கேட்டும் அதைக் கைக்கொள்ளாதவனையோ, நான் இப்போது நியாயந்தீர்ப்பதில்லை. ஏனெனில் உலகத்தை நியாயந்தீர்க்க நான் வரவில்லை. அதை இரட்சிக்கவே நான் வந்தேன். 48என்னைப் புறக்கணித்து என் வார்த்தையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு ஒரு நீதிபதி உண்டு; அது நான் பேசிய இந்த வார்த்தையே ஆகும். அது கடைசி நாளில் அவர்களை நியாயந்தீர்க்கும். 49ஏனெனில் நான் என்னுடைய சுயவிருப்பத்தின்படி பேசவில்லை. என்னை அனுப்பிய பிதாவே நான் என்ன சொல்லவேண்டும் என்றும், அதை எப்படிச் சொல்லவேண்டும் என்றும் எனக்குக் கட்டளையிட்டார். 50அவருடைய கட்டளை நித்திய வாழ்வுக்கு வழிநடத்துகிறது என்று எனக்குத் தெரியும். எனவே பிதா எனக்குச் சொல்லும்படி சொன்னதையே நான் சொல்கிறேன்” என்றார்.