யோவான் 5:17-24

யோவான் 5:17-24 TCV

இயேசு அவர்களிடம், “இன்றுவரை என் பிதா ஓய்வில்லாமல் தன் வேலைகளைச் செய்கிறார்; நானும் வேலைசெய்கிறேன்” என்றார். இயேசு ஓய்வுநாளின் முறைமையை மீறியது மட்டுமல்லாமல், இறைவனைத் தன்னுடைய சொந்தத் தந்தை என்றும் சொல்லி தன்னை இறைவனுக்குச் சமமாக்கினார் என்பதால், யூதர் அவரைக் கொலைசெய்ய இன்னும் அதிகமாய் முயற்சிசெய்தார்கள். இயேசு அவர்களுக்கு சொன்னது: “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், எவைகளையெல்லாம் பிதாவானர் செய்கிறதை மகன் காண்கிறாரோ, அவைகளையே அன்றி தாமாக வேறொன்றையும் செய்யமாட்டார்; பிதா எவைகளை செய்கிறாரோ அவைகளையே மகனும் செய்கிறார். ஏனெனில் பிதா மகனில் அன்பாயிருந்து, தாம் செய்வதையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார். ஆம், நீங்கள் வியப்படையும்படி பிதா இவற்றை விடவும் பெரிதான செயல்களைக் காண்பிப்பார். பிதா மரித்தவர்களை உயிருடன் எழுப்பி, அவர்களுக்கு ஜீவன் கொடுப்பது போலவே, மகனும் தமக்கு விருப்பமுள்ளவர்களுக்கு ஜீவனைக் கொடுக்கிறார். மேலும், பிதா ஒருவரையும் நியாயந்தீர்ப்பதில்லை. நியாயத்தீர்ப்பை கொடுக்கும் வேலை முழுவதையும் மகனிடமே ஒப்படைத்திருக்கிறார். எல்லா மனிதரும் பிதாவைக் கனம் பண்ணுவதுபோல, மகனையும் கனம்பண்ணும்படி இப்படிச் செய்தார். மகனுக்கு கனம் கொடாத எவனும், அவரை அனுப்பிய பிதாவுக்கும் கனம் கொடாதிருக்கிறான். “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னுடைய வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவர்கள் யாரோ, அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படுவதில்லை; அவர்கள் மரணத்தைக் கடந்துசென்று ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறார்கள்.