தேர்களின் இரைச்சலைப் போன்ற சத்தத்துடனும்,
காய்ந்த சருகுகளை எரிக்கும்போது எழும்பும் சத்தத்துடனும்,
யுத்தத்திற்கு அணிவகுக்கும் வலிமைமிக்க படையைப்போல்
அவை மலைமேல் பாய்ந்து வருகின்றன.
அவைகளைக் கண்டதும் நாடுகள் நடுங்கும்;
பயத்தால் எல்லாருடைய முகங்களும் வெளிறிப்போகும்.
வெட்டுக்கிளிகள் இராணுவவீரரைப்போல் தாவி ஓடுகின்றன;
அவை போர் வீரரைப்போல் மதில்களில் ஏறுகின்றன.
அவை தங்கள் பாதையிலிருந்து விலகாமல்
நேராய் அணிவகுத்துச் செல்கின்றன.
அவை ஒன்றையொன்று இடித்துக்கொள்ளாமல்
ஒவ்வொன்றும் தன் வழிதவறாமல் செல்கின்றன.
அணிவகுப்பைக் குலைக்காமல்
போராயுதங்களை இடித்து முன்னேறுகின்றன.
அவை நகரத்தை நோக்கி விரைகின்றன;
மதில்கள்மேல் ஓடுகின்றன.
வீடுகளுக்குள் ஏறுகின்றன;
அவை திருடர்களைப்போல் ஜன்னல் வழியே நுழைகின்றன.
அவற்றின் முன்பாக பூமி அதிருகிறது,
வானம் அசைகிறது.
சூரியனும் சந்திரனும் இருளடைகின்றன,
நட்சத்திரங்கள் ஒளிகொடாதிருக்கின்றன.
யெகோவா தமது படையின் முன்னின்று முழக்கமிடுகிறார்;
அவருடைய பாளையம் மிகப்பெரியது,
அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறதற்கு
வலிமைமிக்கது.
யெகோவாவின் நாள் பெரிதும்
பயங்கரமுமானது.
அதை யாரால் சகிக்கமுடியும்?
ஆகையால், “இப்பொழுதேனும் நீங்கள் உபவாசித்து, அழுது புலம்பி,
உங்கள் முழுமனதுடன் என்னிடம் திரும்புங்கள்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
உங்கள் உடைகளையல்ல,
உங்கள் உள்ளத்தையே கிழியுங்கள்.
உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்புங்கள்;
ஏனெனில் அவர் கிருபையும் கருணையும் உள்ளவர்,
கோபிக்கத் தாமதிக்கிறவர், அன்பு நிறைந்தவர்;
பேரழிவை அனுப்பாமல் மனம் மாறுகிறவர்.
யாருக்குத் தெரியும்? ஒருவேளை அவர் மனமாறி, அனுதாபங்கொண்டு,
உங்களுக்குத் தனது ஆசீர்வாதத்தையும் தரக்கூடும்.
அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்காக
தானிய காணிக்கையையும் பானகாணிக்கையையும் நீங்கள் கொண்டுவரலாம்.
ஆசாரியர்களே, சீயோனிலே எக்காளம் ஊதுங்கள்,
பரிசுத்த உபவாசத்தை அறிவியுங்கள்;
பரிசுத்த திருச்சபையை ஒன்றுகூட்டுங்கள்.
மக்களை ஒன்றுசேர்த்து,
சபையை பரிசுத்தம் செய்யுங்கள்.
முதியோரை ஒன்றுகூட்டுங்கள்,
பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும்
சேர்த்துக்கொள்ளுங்கள்.
மணமகன் தன் அறையையும்,
மணமகள் தன் படுக்கையையும் விட்டுப் புறப்படட்டும்.
யெகோவாவுக்கு முன்பாக ஊழியஞ்செய்யும் ஆசாரியர்கள் புலம்பட்டும்;
ஆலய மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழட்டும்.
அவர்கள், “யெகோவாவே, உமது மக்களைத் தப்புவியும்.
உமது உரிமைச்சொத்தை பிறநாடுகளின் நடுவே
நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதேயும்.
‘அவர்களுடைய இறைவன் எங்கே?’
என்று மக்கள் கூட்டங்கள் மத்தியில் அவர்கள் ஏன் சொல்லவேண்டும்?”
என்று சொல்வார்களாக.
அப்பொழுது யெகோவா தமது நாட்டின்மேல் வைராக்கியங்கொண்டு,
தமது மக்களில் அனுதாபங்கொள்வார்.
யெகோவா தம் மக்களுக்கு மறுமொழியாக கூறியது:
“இதோ, நான் உங்களுக்குத் தானியத்தையும், புதிய திராட்சை இரசத்தையும், எண்ணெயையும்
முழுமையாய் திருப்தியளிக்கும் வகையில் அனுப்புகிறேன்;
நான் இனியும் பிற தேசத்தாருக்கு உங்களை
நிந்தையாக வைக்கமாட்டேன்.
“வடதிசைப் படைகளை உங்களைவிட்டுத் தூரமாய்த் விலக்கிவிடுவேன்;
பாழடைந்த வறண்ட நாட்டிற்கு அவர்களைத் தள்ளிவிடுவேன்.
அதன் முன்னணிப் படைகளை கிழக்கே சாக்கடலிலும்,
அதன் பின்னணிப் படைகளை மேற்கே மத்திய தரைக்கடலிலும் தள்ளுவேன்.
அங்கே அவற்றின் நாற்றமும்
தீய வாடையும் நாட்டின் மேலெழும்பும்.”
நிச்சயமாகவே யெகோவா பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்.
நாடே நீ பயப்படாதே,
மகிழ்ந்து களிகூரு;
நிச்சயமாகவே யெகோவா பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்.
காட்டு மிருகங்களே, பயப்படாதேயுங்கள்,
வனாந்திரத்தின் மேய்ச்சலிடங்கள் பசுமையாகின்றன.
மரங்கள் கனி கொடுக்கின்றன;
அத்திமரமும் திராட்சைக்கொடியும் நிறைவாய்ப் பலனளிக்கின்றன.
சீயோன் மக்களே, மகிழுங்கள்,
உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் களிகூருங்கள்.
ஏனெனில் அவர் தம் நீதியை நிலைநாட்ட
உங்களுக்கு முன்மாரியைத் தந்திருக்கிறார்.
முன்போலவே உங்களுக்கு முன்மாரியையும்
பின்மாரியையும் நிறைவாய்ப் பொழிகிறார்.
சூடடிக்கும் களங்கள் தானியத்தினால் நிரம்பியிருக்கும்;
ஆலைகள் புதிய திராட்சை இரசத்தினாலும் எண்ணெயினாலும் நிரம்பிவழியும்.
நான் உங்களுக்கு மத்தியில் அனுப்பின பச்சைப்புழுக்களும்,
இளம் வெட்டுக்கிளிகளும், துள்ளும் வெட்டுக்கிளிகளும்,
வளர்ந்த வெட்டுக்கிளிகளும் தின்று அழித்த வருடங்களுக்குப் பதிலாக,
உங்களுக்கு ஈடுசெய்வேன்.