ஆறாம் மாதத்தில், கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் ஒரு பட்டணத்திற்கு இறைவன் காபிரியேல் தூதனை, ஒரு கன்னிகையிடம் அனுப்பினார்; அவள் தாவீதின் சந்ததியானாகிய யோசேப்பு என்னும் பெயருள்ள ஒருவனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அந்தக் கன்னிகையின் பெயர் மரியாள். கர்த்தருடைய தூதன் அவளிடம் போய், “மிகவும் தயவு பெற்றவளே வாழ்க! கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்” என்றான். தூதன் சொன்ன வார்த்தையைக் கேட்ட மரியாள் மிகவும் கலக்கமடைந்து, இந்த வாழ்த்துதல் எத்தகையதோ என்று யோசிக்கத் தொடங்கினாள். ஆனால் அந்தத் தூதன் அவளிடம், “மரியாளே, பயப்படாதே! நீ இறைவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறாய். நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும். அவர் பெரியவராயிருப்பார், மகா உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவுபெறாது” என்றான். அப்பொழுது மரியாள் அந்தத் தூதனிடம், “இது எப்படியாகும், நான் கன்னியாய் இருக்கிறேனே?” என்றாள். அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார், மகா உன்னதமானவரின் வல்லமை உன்மேல் நிழலிடும். எனவே பிறக்கும் பரிசுத்த குழந்தை இறைவனின் மகன் என அழைக்கப்படுவார். உனது உறவினராகிய எலிசபெத்தும் தனது முதிர்வயதில் ஒரு குழந்தையைப் பெற இருக்கிறாள். மலடி எனப்பட்டவள் இப்பொழுது கருத்தரித்து ஆறு மாதங்களாகின்றன. இறைவனால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை” என்றான். அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமை; நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அவளைவிட்டுப் போனான்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் லூக்கா 1
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: லூக்கா 1:26-38
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்