லூக்கா 2:1-20

லூக்கா 2:1-20 TCV

அந்நாட்களில் சீசர் அகுஸ்து, ரோமப் பேரரசு முழுவதும் ஒரு குடிமதிப்பு எடுக்கப்படவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். சீரியா நாட்டிற்கு சிரேனியு என்பவன் ஆளுநனாய் இருந்த காலத்தில் இடம்பெற்ற முதலாம் குடிமதிப்பு இதுவேயாகும். எனவே, ஒவ்வொருவரும் தங்களைப் பதிவு செய்வதற்காக, தங்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்றார்கள். அப்பொழுது யோசேப்பும் கலிலேயாவிலுள்ள நாசரேத் பட்டணத்திலிருந்து, யூதேயாவிலுள்ள தாவீதின் பட்டணமான பெத்லகேமுக்குப் போனான். அவன் தாவீதின் குடும்பத்தையும் வம்சத்தையும் சேர்ந்தவனாயிருந்தான். அவன் தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டிருந்த மரியாளையும் கூட்டிக்கொண்டு, பதிவுசெய்யும்படி போனான். அப்பொழுது அவள் கர்ப்பவதியாயிருந்தாள். அவர்கள் அங்கிருக்கையில், அவளுக்குப் பிரசவநேரம் வந்தது; அவள் தன்னுடைய முதல் பிள்ளையான ஆண்குழந்தையைப் பெற்றாள். பிள்ளையை அவள் துணிகளினால் சுற்றி, தொழுவத்திலிருந்த தொட்டியில் கிடத்தினாள்; ஏனெனில் சத்திரத்தில் தங்குவதற்கு அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. அன்றிரவு அருகேயிருந்த வயல்வெளிகளில் மேய்ப்பர்கள் தங்கியிருந்து, இரவிலே தங்கள் மந்தையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். கர்த்தரின் தூதன் ஒருவன் அவர்களுக்குக் காட்சியளித்தான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது. அவர்கள் மிகவும் பயந்தார்கள். ஆனால் அந்தத் தூதன் அவர்களிடம், “பயப்படவேண்டாம், எல்லா மக்களுக்கும் பெருமகிழ்ச்சியைக் கொடுக்கும் நற்செய்தியை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று தாவீதின் பட்டணத்திலே ஒரு இரட்சகர் உங்களுக்காக பிறந்திருக்கிறார்; அவரே கர்த்தராகிய கிறிஸ்து. துணிகளினால் சுற்றப்பட்ட ஒரு குழந்தையை தொழுவத்தில் கிடத்தியிருப்பதை நீங்கள் காண்பீர்கள். இதுவே உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அடையாளம்” என்றான். அப்பொழுது திடீரென பரலோக சேனையின் ஒரு பெருங்கூட்டம் அந்தத் தூதனுடன் காட்சியளித்து, “உன்னதத்தில் இறைவனுக்கு மகிமை உண்டாகட்டும், பூமியில் அவர் தயவு காட்டுகிற மனிதருக்கு சமாதானம் உண்டாகட்டும்” என்று இறைவனைத் துதித்தார்கள். அந்தத் தூதர் அவர்களைவிட்டுப் பரலோகத்துக்குத் திரும்பிப் போனபின்பு, மேய்ப்பர் ஒருவரையொருவர் பார்த்து, “நாம் பெத்லகேமுக்குப் போய், நிகழ்ந்திருப்பதாகக் கர்த்தர் நமக்குச் சொல்லியிருக்கிற இந்தச் சம்பவத்தைப் பார்ப்போம் வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டார்கள். விரைவாய்ப் புறப்பட்டு மரியாளையும் யோசேப்பையும் தொழுவத்திலே கிடத்தப்பட்டிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அக்குழந்தையைக் குறித்து இறைதூதர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியை எங்கும் பரப்பினார்கள். மேய்ப்பர்கள் சொன்னதைக் கேட்ட எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். மரியாளோ இந்தக் காரியங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, ஆழ்ந்து யோசித்தாள். தங்களுக்கு சொல்லப்பட்டபடியே நடந்திருந்தபடியால், மேய்ப்பர்கள் கண்டு கேட்ட எல்லாவற்றையும் குறித்து இறைவனைத் துதித்து, மகிமைப்படுத்திக்கொண்டே திரும்பிச் சென்றார்கள்.