லூக்கா 2:22-35

லூக்கா 2:22-35 TCV

மோசேயின் சட்டத்தின்படி அவர்களுக்குரிய சுத்திகரிப்பின் காலம் முடிவடைந்ததும், யோசேப்பும் மரியாளும் குழந்தையைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கும்படி எருசலேமுக்குக் கொண்டுசென்றார்கள். ஒவ்வொரு முதற்பேறான ஆண் குழந்தையும் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும் என்று கர்த்தருடைய சட்டத்தில் எழுதியிருக்கிறபடியே இதைச் செய்தார்கள். கர்த்தருடைய சட்டத்தில் சொல்லப்பட்டபடியே, ஒரு ஜோடிப் புறாக்களையாவது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையாவது அவர்கள் பலியாகச் செலுத்தும்படியே அங்கு சென்றார்கள். அப்பொழுது எருசலேமில் சிமியோன் என அழைக்கப்பட்ட ஒருவன் இருந்தான்; அவன் நீதிமானும் இறை பக்தி உள்ளவனுமாயிருந்தான். பரிசுத்த ஆவியானவர் அவன்மேல் இருந்தார்; அவன் இஸ்ரயேலர்களுக்கு ஆறுதல் அளிப்பவரின் வருகைக்காகக் காத்திருந்தான். கர்த்தருடைய கிறிஸ்துவைக் காணுமுன் அவன் இறந்து போகமாட்டான் என்று பரிசுத்த ஆவியானவரால் அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அன்று சிமியோன் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு, ஆலயத்திற்குள் வந்திருந்தான். பிள்ளையாகிய இயேசுவுக்கு மோசேயின் சட்ட வழக்கத்தின்படி செய்வதற்காக, அவருடைய பெற்றோர் அவரை உள்ளே கொண்டுவந்தார்கள். அப்பொழுது சிமியோன் அவரைத் தனது கையில் எடுத்து, இறைவனைத் துதித்துச் சொன்னதாவது: “ஆண்டவரே, நீர் வாக்குறுதி தந்தபடியே, உமது வேலைக்காரனாகிய என்னைச் சமாதானத்துடன் போகும்படி இப்பொழுது அனுப்பும். ஏனெனில் எனது கண்கள் உமது இரட்சிப்பைக் கண்டன; இந்த இரட்சிப்பை எல்லா மக்களின் பார்வையிலும் நீர் ஆயத்தமாக்கியிருக்கிறீர்: இது யூதரல்லாதவருக்கு வெளிப்படுத்துதலைக் கொடுக்கும் ஒரு ஒளி, உமது மக்களான இஸ்ரயேலரின் மகிமை” என்றான். குழந்தையின் தகப்பனும் தாயும் அவரைப்பற்றிச் சொல்லப்பட்டதைக் குறித்து வியப்படைந்தார்கள். அப்பொழுது சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, குழந்தையின் தாயாகிய மரியாளுக்குச் சொன்னதாவது: “இஸ்ரயேலில் பலர் வீழ்வதற்கும் பலர் எழுந்திருப்பதற்கும் காரணமாக இந்தக் குழந்தை நியமிக்கப்பட்டிருக்கிறது. பலருக்கு எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இதனால் அநேகருடைய இருதயத்தின் சிந்தனைகள் வெளிப்படுத்தப்படும். உனது ஆத்துமாவையும் ஒரு வாள் ஊடுருவிச் செல்லும்” என்றான்.