மல்கியா 1:2-7

மல்கியா 1:2-7 TCV

“இஸ்ரயேலரே, நான் உங்களில் அன்பாயிருக்கிறேன்” என யெகோவா சொல்கிறார். “ஆனால், ‘எங்களில் எப்படி நீர் அன்பு செலுத்தினீர்?’ என நீங்கள் கேட்கிறீர்கள். “ஏசா யாக்கோபின் சகோதரன் அல்லவா?” அப்படியிருந்தும், “யாக்கோபை நான் நேசித்தேன். ஏசாவையோ நான் வெறுத்தேன், அவனுடைய மலையைப் பாழடையச் செய்து அவனுடைய சொத்துரிமையை பாலைவன நரிகளுக்குக் கொடுத்தேன்” என்று யெகோவா சொல்கிறார். “நாங்கள் நொறுக்கப்பட்டோம், ஆயினும் திரும்பிவந்து பாழடைந்தவற்றைக் கட்டியெழுப்புவோம்” என ஏதோமியர் சொல்லலாம். ஆனால் சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “அவர்கள் கட்டியெழுப்பலாம், ஆனால் நான் அதை இடித்து அழிப்பேன். அவர்கள் கொடுமையின் நாடு என்றும், எப்பொழுதும் யெகோவாவின் கோபத்திற்கு உள்ளான மக்கள் என்றும் அழைக்கப்படுவார்கள். உங்கள் சொந்தக் கண்களினால் இதைக் காண்பீர்கள். அப்பொழுது நீங்கள், ‘யெகோவாவே மிகவும் பெரியவர், இஸ்ரயேலின் எல்லைகளைக் கடந்தும் யெகோவாவே பெரியவர்’ என்று சொல்வீர்கள். “ஒரு மகன் தன் தகப்பனையும், ஒரு வேலைக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறான். நான் ஒரு தகப்பனாயிருந்தால், எனக்குரிய கனம் எங்கே? நான் ஒரு எஜமானாயிருந்தால், எனக்குரிய மரியாதை எங்கே?” என சேனைகளின் யெகோவா உங்களிடம் கேட்கிறார். ஆசாரியர்களே, நீங்கள் அல்லவா என்னுடைய பெயரை அவமதிக்கிறீர்கள். ஆனால், “உம்முடைய பெயரை எப்படி அவமதித்தோம்?” எனக் கேட்கிறீர்கள். என் பலிபீடத்தின்மேல் அசுத்தமான காணிக்கைகளை வைக்கிறீர்கள். ஆயினும், “உம்மை எப்படி கறைபடுத்தினோம்?” என்று நீங்கள் கேட்கிறீர்கள். யெகோவாவின் மேஜை மதிப்புக்குரியது என்று நீங்கள் எண்ணாததினாலேயே அப்படிச் செய்கிறீர்கள்.