மல்கியா 2:1-7

மல்கியா 2:1-7 TCV

“ஆசாரியர்களே, இப்போதும் இந்த எச்சரிக்கை உங்களுக்கு கொடுக்கப்படுகிறது. நீங்கள் செவிகொடாமலும், என் பெயரைக் கனம்பண்ண உங்கள் இருதயத்தில் தீர்மானிக்காமலும்விட்டால், உங்கள்மேல் ஒரு சாபத்தை அனுப்புவேன்; உங்கள் ஆசீர்வாதங்களையும் சபிப்பேன். ஆம், நீங்கள் என்னைக் கனம்பண்ணுவதற்கு உங்கள் இருதயத்தில் தீர்மானிக்காமல் போனதால், நான் ஏற்கெனவே அவைகளை சபித்து விட்டேன்” என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார். “உங்கள் நிமித்தம் உங்கள் வழித்தோன்றல்களை நான் கடிந்துகொள்வேன்; நீங்கள் பண்டிகைக் காலங்களில் பலியிட்ட மிருகங்களின் கழிவுகளை உங்கள் முகங்களில் வீசுவேன். நீங்களும் அதனுடன் எறியப்படக் கொண்டுபோகப்படுவீர்கள். ஆசாரியர்களே நான் உங்களுக்கு ஒரு எச்சரிப்பை அனுப்புகிறேன். லேவியின் சந்ததியுடன் நான் செய்துகொண்ட உடன்படிக்கை மேலும் தொடரும்படி, இந்த எச்சரிக்கையை நான் அனுப்பினேன் என்பதை அப்பொழுது நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “நான் அவனுடன் செய்துகொண்ட உடன்படிக்கை வாழ்வையும் சமாதானத்தையும் கொடுக்கும் உடன்படிக்கை; அவற்றை நான் அவனுக்குக் கொடுத்தேன்; இதனால் நான் அவனிடம் பயபக்தியை எதிர்ப்பார்த்தேன். அவனும் என்னிடம் பயபக்தியாயிருந்து என் பெயரைக் குறித்த பயம் உடையவனாயிருந்தான். அவன் வாயில் உண்மையான அறிவுறுத்தல் இருந்தது. அவனுடைய உதடுகளில் பொய்யானதொன்றும் காணப்படவில்லை. அவன் என்னோடு சமாதானத்துடனும், நீதியுடனும் நடந்தான். அவன் அநேகரைப் பாவத்திலிருந்து திருப்பினான். “ஆசாரியனின் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ள வேண்டும். அவனுடைய வாயிலிருந்து மனிதர் அறிவுறுத்தலை நாடிக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவனே சேனைகளின் யெகோவாவின் தூதுவனாயிருக்கிறான்.